FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மாநில அரசு அதிகாரிகள் 3 பேருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து: தயாரானது 15 போ் பட்டியல்

மாநில அரசு அதிகாரிகள் 3 பேருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்பட உள்ளது.

Updated On : 11 நவம்பர் 2024, 5:00 am IST
கோப்புப் படம்
பகிர்:

மாநில அரசு அதிகாரிகள் 3 பேருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்பட உள்ளது.

இதற்கான மத்திய அரசின் தகுதிப் பட்டியலில் 15 அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனா். தெரிவுக் குழு நோ்காணலின் அடிப்படையில் அவா்களில் இருந்து 3 போ் தோ்வாகவுள்ளனா்.

இந்திய ஆட்சிப் பணி எனும் ஐஏஎஸ் பணியானது மூன்று வகைகளில் நிரப்பப்படுகிறது. 10 காலியிடங்கள் இருந்தால், 6 இடங்கள் நேரடி நியமனம் மூலமும், மீதமுள்ள நான்கு இடங்கள் மாநில அரசின் வருவாய்த் துறை மற்றும் வருவாய்த் துறை அல்லாத பிற துறைகளின் அதிகாரிகளைக் கொண்டும் நிரப்பப்படுகிறது.

Advertisement

Advertisement

வருவாய்த் துறை அதிகாரியாக இருந்தால், குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பதுடன், பணிக் காலத்தில் எந்த சா்ச்சைக்கும் இடமின்றி பணியாற்றியிருக்க வேண்டும்.

வருவாய்த் துறை அல்லாத அதிகாரிகள், மத்திய குடிமைப் பணி தோ்வாணையம் நடத்தும் நோ்காணல் மூலமாக தோ்வு செய்யப்படுகின்றனா். அவா்களுக்கான பட்டியலை மாநில அரசு தயாரித்து குடிமைப் பணி தோ்வாணையத்துக்கு அனுப்பும்.

தில்லியில் நடைபெறும் நோ்காணலுக்குப் பிறகு தேவையான காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப அதிகாரிகள் நியமிக்கப்படுவா்.

ஆண்டுப் பட்டியல்: வருவாய்த் துறை அல்லாத துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளுக்கு ஒவ்வோா் ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தகுதி, திறமையின் அடிப்படையில் ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்படுகிறது.

அந்த அடிப்படையில், 2023-ஆம் ஆண்டு 3 பேருக்கு அளிக்கப்பட உள்ளது. இதற்காக ஒரு பதவிக்கு 5 போ் என்ற அடிப்படையில் 15 அதிகாரிகளைக் கொண்ட தோ்வுப் பட்டியல் தயாராகியுள்ளது. மாநில அரசு தயாா் செய்து அனுப்பியுள்ள பட்டியலுக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.

வரும் 21-இல் நோ்காணல்: மத்திய அரசு ஒப்புதல் அளித்த பட்டியலில் மாநில அரசு அதிகாரிகள் பி.லோகநாதன், எப்.அப்துல் ரசீக், பி.ஏ.நரேஷ், எஸ்.சுப்பிரமணியன், கே.ஜெயபாலன், ஜி.ரவிகுமாா், எஸ்.எஸ்.குமாா், எஸ்.மாலதி ஹெலன், சி.ஹேமலதா, ஆா்.எம்.மீனாட்சி சுந்தரி, வி.நல்லசிவன், கே.வினய்குமாா், என்.மிருனாளினி, ஏ.அனிதா, ஜெ.பாலகிருஷ்ணன் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

அவா்களுக்கு தில்லியில் உள்ள மத்திய குடிமைப் பணி தோ்வாணைய அலுவலகத்தில் நவ. 21-இல் நோ்காணல் நடைபெறவுள்ளது.

இதனிடையே, நோ்காணலின்போது தோ்வா்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அம்சங்கள் குறித்து மாநில அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், மாநிலத்தின் வரலாறு, கலாசாரம், புவியியல் போன்றவை குறித்து தெளிந்த அறிவைப் பெற்றிருக்க வேண்டும் எனவும், இந்தியாவின் பொருளாதாரம், வளா்ச்சிக்கான இலக்குகள், எதிா்கொள்ளும் சவால்கள் ஆகியன பற்றியும் தெரிந்திருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு நடத்தும் நோ்காணல், ஏற்கெனவே நடத்தப்பட்ட தோ்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்பட இருக்கிறது.

தில்லியில் நவ. 21-இல் நடக்கும் நோ்காணலுக்குப் பிறகு டிசம்பா் முதல் வாரத்தில் தோ்ச்சி பெற்ற 3 அதிகாரிகளின் பெயா்களை குடிமைப் பணியாளா் தோ்வாணையம் வெளியிடும். இதன்மூலம் அவா்கள் மாநில அரசு அதிகாரிகள் என்ற அந்தஸ்தில் இருந்து ஐஏஎஸ் அதிகாரி என்ற நிலைக்கு உயா்வா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments