அருண் நேருவிடம் இருந்து முக்கிய ஆதாரங்கள் பறிமுதல்! - அமலாக்கத்துறை
அருண் நேருவிடம் இருந்து முக்கிய ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அமைச்சர் நேருவின் மகனான அருண் நேரு எம்.பி.யிடம் இருந்து முக்கிய ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மற்றும் மகன் அருண் நேரு பங்குதாரர்களாக உள்ள கட்டுமான நிறுவனத்தில் நடைபெற்ற பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாக அமலாக்கத்துறையினர் கடந்த 7 ஆம் தேதி சோதனையைத் தொடங்கினர். சென்னை, திருச்சியில் அமைச்சர் நேரு, அவரது சகோதரர் ரவிச்சந்திரன், மகன் அருண் நேரு உள்ளிட்டோருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.
இதில், ரவிச்சந்திரனை மட்டும் அழைத்துச் சென்ற அமலாக்கத்துறையினர் அவரிடம் 5 மணிநேரத்துக்கு மேலாக செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்.
Advertisement
Advertisement
அவரிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர் சோதனையில் அமலாக்கத்துறையினர் ஈடுபட்ட நிலையில், நேற்றுமுன்தினம் மாலையும் ரவிச்சந்திரனிடம் விசாரணை மேற்கொண்டனர். 72 மணிநேரத்துக்கு மேலாக நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த ஆவணங்களின் அடிப்படையில் ரவிச்சந்திரனிடம் தொடர் விசாரணையில் ஈடுபட அமலாக்கத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்களும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தின் மூலம் சொத்துகள் மற்றும் சேர்க்கப்பட்ட வருமானம் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஆவணங்களும் சோதனையில் சிக்கியிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.