முகப்பு
தமிழ்நாடு

ஞானசேகரன் செல்போன் ஃப்ளைட் மோடில் இருந்தது ஆதாரப்பூர்வமாக நிரூபணம்: அரசுத்தரப்பு வழக்குரைஞர்

ஞானசேகரன் செல்போன் ஃப்ளைட் மோடில் இருந்தது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதாக அரசுத்தரப்பு வழக்குரைஞர் தகவல்.

Updated On : 2 ஜூன் 2025, 11:33 am IST
ஞானசேகரன் - கோப்புப்படம் - gnanasekaran
பகிர்:

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் குற்றச்செயலில் ஈடுபட்டபோது, ஞானசேகரன் செல்ஃபோன் ஃபிளைட் மோடில் இருந்தது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்குரைஞர் மேரி ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

சிறப்புப் புலனாய்வு குழு சிறப்பாக விசாரணை நடத்தியதால் விசாரணை விரைவாக, சிறப்பாக நிறைவடைந்துள்ளது என்றும் அரசுத் தரப்பு வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை பிறப்பித்து சென்னை மகளிா் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த மே 28ஆம் தேதி, ஞானசேகரன் குற்றவாளி என தீா்ப்பளித்திருந்தது. தீர்ப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள 12 சட்டப் பிரிவுகளில் 11 சட்டப் பிரிவுகளின் கீழ் ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகள் அரசுத் தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாககவும், எனவே, ஞானசேகரன் குற்றவாளி எனவும் நீதிபதி எம். ராஜலட்சுமி தீா்ப்பளித்திருந்த நிலையில், இன்று ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அரசுத் தரப்பு வழக்குரைஞர் மேரி ஜெயந்தி கூறுகையில், இனி யார் அந்த சார்? என்று கேள்வி எழுப்பினால் அது நீதிமன்ற அவமதிப்பாகும். ஞானசேகரனின் பின்புலத்தில் யாரும் இல்லை. சம்பவம் நடந்த போது, அவரது ஃபோன் ஃபிளைட் மோடில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையிலும் அது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஞானசேகரன் செல்போனுக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்று பாதிக்கப்பட்ட மாணவியும் உறுதி செய்திருந்தார். ஆதாரப்பூர்வமாகவும் அது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பாதிக்கப்பட்ட மாணவியை மிரட்டுவதற்காகவே, அவர் தானும் அந்த பல்கலை. ஊழியர் என்று, ஞானசேகரன் யாருடனோ போனில் பேசியது போல நடித்துள்ளார். ஆனால், செல்போன் பிளைட் மோடில் இருந்ததை, செல்போன் சேவை நிறுவனமே உறுதி செய்துள்ளது. இதன் மூலம், ஞானசேகரனைத் தவிர, வேறு யாருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அரசுத் தரப்பு வழக்குரைஞர் மேரி ஜெயந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.