FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டுக்கான தண்டனை! -விஜய்

தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டுக்கான தண்டனை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Updated On : 5 மார்ச் 2025, 9:11 am IST
தவெக தலைவர் விஜய்
பகிர்:

தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டுக்கான தண்டனை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக, தமிழக அரசின் சாா்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று (மாா்ச் 5) நடைபெறுகிறது. நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10 மணிக்குத் தொடங்கவுள்ள இந்தக் கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.

கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக திமுக, அதிமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மக்கள் நீதி மய்யம், பாமக, தேமுதிக ஆகிய பிரதான கட்சிகள் அறிவித்துள்ளன. அதேசமயம், பாஜக, நாம் தமிழா், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “நம் அரசியல் சாசனத்தின் 84-வது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு 2026ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் ஆண்டிற்கு பிறகு இந்த மறுசீரமைப்புப் பணி, ஒன்றிய அரசால் தொடங்கப்பட வாய்ப்புள்ளது.

எவ்வகையில் இந்த மறுசீரமைப்பு நடைபெறும் என்பது பற்றி எந்த ஒரு தெளிவான விளக்கமோ வாக்குறுதியோ மாநிலங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. தற்போதைய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமலோ அல்லது இன்னொரு அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தியோ இந்த மறுசீரமைப்பு நடைபெறலாம்.

எந்த முறையைப் பின்பற்றினாலும் அதில் "மாநிலங்களின் மக்கள் தொகை" என்பது ஒற்றை அளவுகோலாக இல்லாவிடினும் முக்கிய அளவுகோலாக இருக்கும் என்பது பட்டவர்த்தனமான உண்மை. நம் அரசியல் சாசன 81 வது சட்டப் பிரிவு, நாட்டிலுள்ள ஒவ்வொரு மக்களவை உறுப்பினரும் கூடுமானவரையில் "சம-எண்ணிக்கையிலான மக்களுக்குப் பிரதிநிதியாக இருக்க வேண்டும்" என்று கூறுகிறது.

இதற்கு அடிப்படையான "ஒரு வாக்கு - ஒரு மதிப்பு" என்பது ஒரு ஜனநாயகக் கோட்பாடு. ஆனால் அதே சமயம் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட கூட்டாட்சி நாட்டில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதும் ஒரு முக்கியமான ஜனநாயகக் கோட்பாடாகும்.

இந்த இரு கோட்பாடுகளையும் முடிந்தவரையில் ஒன்று மற்றொன்றை அதிகம் பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்த முயல வேண்டும். புதிதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மட்டுமோ அல்லது புதிய மக்கள் தொகையை ஒரு முக்கிய அளவுகோலாகக் கொண்டோ நிகழ்த்தப்படும் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும் ஆபத்து உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments