வடகாடு மோதல் சம்பவம்: தேசிய ஆதிதிராவிடர் ஆணையக்குழு ஆய்வு!
வடகாடு மோதல் சம்பவம் தொடர்பாக....
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களை சந்தித்து தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் மே 5 ஆம் தேதி இரவு இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் காயமடைந்தனர். குடிசை, வாகனங்களுக்கு தீவைப்பு சம்பவமும் பேருந்து, காவல் வாகனத்தின் கண்ணாடிகளும் சேதப்படுத்தப்பட்டன.
இதுதொடர்பாக வடகாடு போலீஸார் 21 பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மற்றொரு தரப்பில் 8 பேர் என மொத்தம் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில், மோதல் தொடர்பாக சண்முகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு தொடர்பான விசாரணையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகினர்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். மோதல் சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா பதிவுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வடகாடு போலீஸார் மோதல் மற்றும் மறியல் நடைபெற்ற இடங்கள், பெட்ரோல் நிலையங்கள், வணிக நிறுவனங்கள்,கடைவீதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
வடகாடு மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை காலை ஆட்சியர் மு.அருணா ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, வடகாட்டில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையக்குழு இயக்குநர் எஸ்.ரவிவர்மன் தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு பின்னர் ஆணைய இயக்குநர் எஸ்.ரவிவர்மன் பேசுகையில், வடகாட்டில் பட்டியலின சமூக மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், சம்பந்தப்பட்ட பகுதிகளில் முழுமையான ஆய்வு மேற்கொண்டுள்ளோம். இதுகுறித்து இன்னும் இரண்டு நாள்களில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம், இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு குறித்து நாங்கள் தற்போது கருத்து சொல்ல முடியாது” என்று தெரிவித்தார்.
ஆய்வின்போது புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிக்க: 'ஓபிஎஸ் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறார்' - நயினார் நாகேந்திரன்