தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!
தேர்தல் நேரம் என்பதால் வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்.
நேரத்துக்கு ஏற்றார்போல சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுவது மக்கள் அனைவரும் அறிந்ததே, தற்போது தேர்தல் நேரம் என்பதால், வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் விதவிதமான மோசடிகள் நடப்பது குறித்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உங்கள் வாக்காளர் அடையாள அட்டை, பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. மீண்டும் அப்ளை செய்ய லிங்கை கிளிக் செய்யவும் என்றும், உங்கள் வாக்காளர் எண், பதிவேற்றப்பட்ட பட்டியலில் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும் என்பது போன்று விதவிதமாக எஸ்எம்எஸ்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இதுபோன்ற எந்தவொரு தகவலையும் தேர்தல் ஆணையம் அனுப்பாது என்றும், மக்கள் இது குறித்து விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்றும் காவல்துறையால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வீட்டில் உள்ள வயதானவர்கள், விழிப்புணர்வு பெறாதவர்களுக்கும் இது குறித்து தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல, புதிய வாக்காளர் பட்டியலில், உங்கள் விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள், புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்திருந்தீர்களே அது ரத்து செய்யப்பட்டுள்ளது. காரணம் அறிய என்று பல விதங்களில் குறுஞ்செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
எனவே, வாக்காளர் அடையாள அட்டை குறித்து குறுஞ்செய்திகள் எது வந்தாலும், அதிலிருக்கும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம், தேர்தல் ஆணையம், தனிப்பட்ட முறையில் யாருக்கும் இதுபோன்ற குறுஞ்செய்திகளை அனுப்பாது, இணையதள மோசடியாளர்கள், இதுபோன்ற லிங்குகளை அனுப்பி, உங்கள் செல்போனில் இணைக்கப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கு மற்றும் பிற விவரங்களைத் திருடி சைபர் மோசடியில் ஈடுபடும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, விண்ணப்பித்தவர்கள், விண்ணப்ப நிலை அறிவது என அனைத்தையும் உரிய இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளவும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.