புதுச்சேரி பள்ளிகளில் பிரெஞ்ச் மொழி நீக்கம்: வைகோ கண்டனம்
புதுச்சேரி பள்ளிகளில் 6 ஆம் வகுப்பிலிருந்து பிரெஞ்ச் மொழி நீக்கப்படும் என்கிற அறிவிப்புக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பள்ளிகளில் 6 ஆம் வகுப்பிலிருந்து பிரெஞ்ச் மொழி நீக்கப்படும் என்கிற அறிவிப்புக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியத்தின் இயக்குநர் பிரக்யாசிங், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்களுக்கு ஓர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்தக் கல்வியாண்டு முதல் புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ. கல்வி முறையில் இயங்கி வரும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பிலிருந்து பிரெஞ்ச் மொழி நீக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
அங்கு சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற்று புதிய அரசு பொறுப்பேற்க உள்ள சூழலில், அவசர அவசரமாக இந்த ஆணையை ஏழே நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையும், அங்குள்ள தனியார் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் பிரெஞ்ச் எனும் மும்மொழிக் கொள்கையும் நடைமுறையில் உள்ள சூழலில் அங்குள்ள அரசு பள்ளிகள் சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக பெரும்பாலும் மாற்றப்பட்டுவிட்டன.
இப்படிப்பட்ட சூழலில், புதிய மொழிக் கொள்கையைக் காரணமாகக் காட்டி ஒரு வெளிநாட்டு மொழியை மட்டும்தான் படிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, ஆங்கில மொழியை வைத்துக் கொண்டு பிரெஞ்ச் மொழியை அகற்றும் பணியில் மத்திய பா.ஜ.க. அரசு முனைந்துள்ளது.
புதுச்சேரி மாநிலம் பிரெஞ்ச் கலாச்சாரத்தோடு தொடர்புடைய மக்கள் வாழும் மாநிலமாகும். இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் புதுச்சேரியிலும் பிரெஞ்சிலும் இன்னமும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். பிரெஞ்ச் மொழியோடு உணர்வுபூர்வமான பிணைப்பு அம்மாநில மக்களுக்கு உண்டு. இதனைத்தான் பிரெஞ்ச் கலாச்சாரத்தின் ஜன்னல் புதுச்சேரி மாநிலம் என்று குறிப்பிட்டார் ஜவஹர்லால் நேரு.
இப்படிப்பட்ட சூழலில் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பிரெஞ்ச் மொழி படித்த மாணவர்களின் எதிர்காலம் அங்கு கேள்விக்குறியாகி உள்ளது. பிரெஞ்ச் மொழி கற்பித்த ஆசிரியர்களின் வேலை குறித்த கவலையும் அங்கு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு அவசர அவசரமாக பிரெஞ்ச் மொழியை பள்ளிகளிலிருந்து அகற்றி உள்ள இந்த நடவடிக்கைக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, மீண்டும் பிரெஞ்ச் மொழியை அங்குள்ள பள்ளிகளில் கற்பிப்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் மத்திய பா.ஜ.க. அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இதைப் போலவே, மத்திய பா.ஜ.க. அரசு ரயில்வே துறையில் ஆள் குறைப்பு என்ற அநீதியை ஆரவாரமின்றி இழைத்துள்ளது. ரயில்வே வாரியத்தின் சார்பில், ரயில்வே துறையின் மண்டல பொது மேலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ரயில்வே துறையின் பணியாளர்களை 2 விழுக்காடு அளவு குறைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
இதன்படி ரயில்வே துறையில் 29,608 பணியிடங்கள் குறைக்கப்படக் கூடிய அபாயம் நிகழ உள்ளது. தெற்கு ரயில்வேயில் மட்டும் 1906 பணி இடங்களும், ஐ.சி.எப். நிர்வாகத்தில் 217 பணியிடங்களுக்கும் இதன் மூலம் அகற்றப்படும்.
ரயில்வே துறையில் உள்ள 14.8 இலட்சம் பணியிடங்களில் தற்போது 11 லட்சம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளன. 3 லட்சம் பணி நியமனங்கள் நிரப்பப்படாத சூழ்நிலையில் அங்குள்ள பணியாளர்கள் கூடுதல் சுமையுடன் பணியாற்றி வருகிறார்கள்.
வேலை இல்லா திண்டாட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், மத்திய அரசின் இந்த ஆள் குறைப்பு நடவடிக்கை தொழிலாளர் விரோத நடவடிக்கை ஆகும்.
சமூக நீதிக்கு எதிராக ரயில்வே துறையை மெல்ல மெல்ல தனியார் மயமாக்கும் சூழ்ச்சியான நடவடிக்கையே இது.
எனவே, மத்திய பா.ஜ.க. அரசு இந்த உத்தரவை நிறுத்தி வைப்பதோடு, ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்கவும் ரயில்வே துறையில் உள்ள காலி இடங்களை நிரப்பவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
MDMK General Secretary Vaiko has expressed his condemnation of the announcement that the French language will be removed from the 6th standard onwards in Puducherry schools.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.