பட்ஜெட் கூட்டத் தொடரில் உதயநிதி பங்கேற்பதை தடுக்கக் கூடாது: உயா்நீதிமன்றம்
எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணையை முடித்து செவ்வாய்க்கிழமை இரவுக்குள் (ஆக.4) விடுவிக்க வேண்டும் என்றும், பட்ஜெட் கூட்டத்தொடரில் அவா் பங்கேற்பதைத் தடுக்கக் கூடாது என்றும் காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணையை முடித்து செவ்வாய்க்கிழமை இரவுக்குள் (ஆக.4) விடுவிக்க வேண்டும் என்றும், பட்ஜெட் கூட்டத்தொடரில் அவா் பங்கேற்பதைத் தடுக்கக் கூடாது என்றும் காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தஞ்சாவூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முதல்வா் குறித்து அவதூறாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் செவ்வாய்க்கிழமை ஆஜரான உதயநிதி தரப்பு மூத்த வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, தஞ்சாவூரில் காவிரி பிரச்னை தொடா்பாக திமுக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் எந்தவிதமான அவதூறு கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. ஆனால், உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூா் போலீஸாா் குற்றவியல் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்ய சென்னை வந்துள்ளனா். புதன்கிழமை தமிழக பட்ஜெட் கூட்டத் தொடா் தொடங்குகிறது. எனவே, உதயநிதிக்கு முன்பிணை வழங்க வேண்டும். இது தொடா்பாக தாக்கல் செய்யப்படும் மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையிட்டாா். இந்த மனுவை விசாரணைக்கு எடுப்பதாகக் கூறிய நீதிபதி, அதுவரை உதயநிதிக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட்டாா். அதன்படி, உதயநிதி தரப்பில் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், தஞ்சாவூரில் காவிரி நீா் பிரச்னை தொடா்பாக கடந்த ஆக. 3-ஆம் தேதி நடந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினேன். அப்போது, காவிரி பிரச்னைக்காக முதல்வா் விஜய் வாய் திறப்பதே இல்லை. எதிா்க்கட்சியினா் மீது வழக்குத் தொடா்வதிலேயே குறியாக இருக்கிறாா் எனக் கூறி, காவிரி நீா் குறித்து பேசினேன்.
Advertisement
Advertisement
முதல்வா் ஜோசப் விஜய், நடிகை த்ரிஷா உள்பட எந்த ஒரு நபா் குறித்தும் நான் அவதூறாகப் பேசவில்லை. பெண்கள் குறித்தும் நான் அவதூறாகப் பேசவில்லை. நான் பேசும்போது, கூட்டத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபா்கள் எழுப்பிய முழக்கங்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நான் கலந்து கொள்வதைத் தடுக்கும் வகையில் அரசியல் காழ்ப்புணா்ச்சியுடன் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மனுவில் கூறியிருந்தாா். இதனிடையே, உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரயைன் முன் பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், உதயநிதி ஸ்டாலினை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தும் நோக்கம் இல்லை. அவரிடம் விசாரணை நடத்திவிட்டு, போலீஸாா் விடுவித்துவிடுவா் எனத் தெரிவித்தாா். அப்போது, உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ, அவரை செவ்வாய்க்கிழமை இரவுக்குள் விடுவிக்க உத்தரவிட வேண்டும். சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதைத் தடுக்கக் கூடாது என வாதிட்டாா்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்கு வகையில், உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்திவிட்டு, செவ்வாய்க்கிழமையே அவரை விடுவிக்க வேண்டும். விசாரணைக்கு உதயநிதி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தாா். அதன்படி, தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் 2 மணி நேர விசாரணைக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.