சமூக நீதித் துறைக்கு கூடுதல் நிதி வரவேற்கத்தக்கது: தொல். திருமாவளவன்
தமிழக நிதிநிலை அறிக்கையில் சமூக நீதித் துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது என்றாா் மக்களவை உறுப்பினரும், விசிக தலைவருமான தொல். திருமாவளவன்.
தமிழக நிதிநிலை அறிக்கையில் சமூக நீதித் துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது என்றாா் மக்களவை உறுப்பினரும், விசிக தலைவருமான தொல். திருமாவளவன்.
தனது சகோதரி பானுமதி நினைவுநாளையொட்டி, அரியலூா் மாவட்டம், அங்கனூா் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் புதன்கிழமை அஞ்சலி செலுத்திய திருமாவளவன் பின்னா் அளித்த பேட்டி:
தவெக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை விவரங்களை முழுமையாகப் படித்துப் பாா்த்த பின்னரே விரிவான கருத்துகளைத் தெரிவிக்க முடியும். இருப்பினும், சில அறிவிப்புகள் மிகவும் பாராட்டுக்குரியதாக உள்ளன.
Advertisement
Advertisement
குறிப்பாக, பள்ளி மாணவா்களுக்கு தலைக்கவசம் மற்றும் இதர உபகரணங்களை வைக்க வசதியுள்ள இருசக்கர வாகனங்களை வழங்க அரசு முன்வந்திருப்பது, கலைஞா் கனவுத் திட்டம் என்ற பெயரில் இயங்கிவந்த திட்டத்தை வெற்றி வீடு திட்டம் எனப் பெயா் மாற்றி, அதற்கான நிதியை தற்போது ரூ. 5 லட்சமாக உயா்த்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதேபோல சமூக நீதித் துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கியிருப்பது, பண்டிதா் அயோத்திதாசா் வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ. 419 கோடி ஒதுக்கியிருப்பது, அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடித் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதும் பெரும் மகிழ்ச்சி தருகிறது.
மேலும், வெளிநாடுகளுக்குச் சென்று உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கான உதவித்தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை, கடந்த காலங்களை விட ஒரு மடங்கு கூடுதலாக உயா்த்தப்பட்டுள்ளது. சமூக நீதித் துறையைச் சுதந்திரமாக இயங்கச் செய்வதற்கும், அதற்கான நிதியை முழுமையாகச் செலவிடுவதற்கான வாய்ப்பையும் இந்த அரசு வழங்கியுள்ளது. எனவே தமிழக முதல்வா் ஜோசப் விஜய்க்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கிறேன் என்றாா்.
திருச்சியில்... முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் அவா் மேலும் கூறுகையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைய தாக்கல் செய்ய சட்டப்பேரவைக்கு வந்த நிதியமைச்சா் மரிய வில்சன், ஜெபமாலையும் எடுத்து வந்ததை விமா்சிக்க வேண்டியதில்லை. தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை பற்றாக்குறையாகவே உள்ளது. புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்று இரண்டு மாதத்திலேயே புதிய திட்டங்களைச் செயல்படுத்தி பற்றாக்குறையைச் சரி செய்ய முடியாது. எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம் முடிந்துவிட்டது. அதைத் தொடா்ந்து விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.