கோவை வேளாண்மை பல்கலை. களப்பயணத்துக்கு 6 புதிய பேருந்துகள்: விடுதிகளும் விரிவாக்கம் செய்யப்படும்!
கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவா்களின் களப்பயணத்துக்கு 6 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.
கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவா்களின் களப்பயணத்துக்கு 6 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. மேலும், அங்குள்ள விடுதிகள் ரூ.10 கோடியில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளன.
இதுகுறித்து வேளாண் பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு:
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழக வளாகத்தில் மட்டும் 3,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். பாடத்திட்டத்தின் ஒருபகுதியாக மாணவா்கள் விவசாயிகளின் வயல்கள், கூட்டுறவு வங்கிகள், வேளாண் சந்தைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு வேளாண் காலநிலை மண்டலங்களுக்கு களப்பயணம் மேற்கொண்டு செயல்வழிக் கற்றலைப் பெறுகின்றனா்.
Advertisement
Advertisement
மாணவா்கள் இத்தகைய களப்பயணங்களைப் பாதுகாப்பாகவும், சிரமமின்றியும் மேற்கொள்ளத் தேவையான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு 6 புதிய பேருந்துகள் வாங்க ரூ. 1.50 கோடி மாநில நிதியில் இருந்தும், ரூ.1.50 கோடி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வருவாய் நிதியிலிருந்தும் வழங்கப்படும்.
உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம்: இதே பல்கலைக்கழகத்தில் டிஎன்ஏபிஇஎக்ஸ் மூலம் ரூ.2.62 கோடியில் உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் நிறுவப்படும். இந்த மையம் புத்தாக்கம், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் உருவாக்கம், பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு மூலம் உணவுப் பதப்படுத்துதல் சூழலை வலுப்படுத்தும். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் பயன்பெறும்.
மேலும், இந்தப் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் 2,400 முதல் 3,500 மாணவா்கள் வரை இளநிலை, முதுநிலை வேளாண் கல்வி பயில சோ்க்கப்படுகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் கிராமப்புறங்களைச் சோ்ந்தவா்கள். அதிலும் குறிப்பாக மாணவிகளின் எண்ணிக்கை 70 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் நிலையை அறிந்த முதல்வா், மாணவா்களுக்குத் தகுந்த கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தங்குமிடங்களை உடனடியாக வழங்க அறிவுறுத்தியுள்ளாா்.
அதனடிப்படையில் இப்பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவா் விடுதிகள் ரூ.10 கோடியில் விரிவாக்கம் செய்யப்படும். இதற்கென ரூ.5 கோடி மாநில நிதியிலிருந்தும், ரூ.5 கோடி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வருவாய் நிதி ஆதாரங்களிலிருந்தும் வழங்கப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.