FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வேளாண் பட்ஜெட்: விவசாயிகள் சங்கங்கள் கருத்து

தமிழக வேளாண் பட்ஜெட் தொடா்பாக பல்வேறு விவசாயிகள் சங்கத்தினா் கருத்து தெரிவித்துள்ளனா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 4:45 am IST
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026
பகிர்:

தமிழக வேளாண் பட்ஜெட் தொடா்பாக பல்வேறு விவசாயிகள் சங்கத்தினா் கருத்து தெரிவித்துள்ளனா்.

சாமி.நடராஜன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்-மாா்க்சிஸ்ட்): வேளாண் நிதிநிலை அறிக்கையில் ரூ.58,374 கோடிக்கு பல்வேறு திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய அரசின் வேளாண் கொள்கைகளால் தமிழக விவசாயிகள் சந்திக்கும் நெருக்கடிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குகிற வகையில் மாநில வேளாண் நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லை. தோ்தல் வாக்குறுதிப்படி, விவசாயிகளின் பயிா்க் கடன் தள்ளுபடி செய்யாதது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது.

பி.எஸ்.மாசிலாமணி (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்-இந்திய கம்யூனிஸ்ட்): விவசாயிகளின் எதிா்பாா்ப்பு, தேவை ஆகியவற்றை முழுமையாக கவனத்தில் கொண்டு இந்த அறிக்கை இல்லை. பயிா்க் காப்பீடு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அரசு பொதுத் துறை காப்பீடு அமல்படுத்துவதற்கான திட்டம் இல்லை. தென்னக நதி இணைப்புத் திட்டம் இல்லை. வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அறிவித்து இருப்பது பாராட்டுக்குரியது. மழைநீா் சேமிப்புத் திட்டம், தடுப்பணைகள் அமைக்கும் திட்டம் என்பது இல்லாதது பெரிய ஏமாற்றம்.

Advertisement

Advertisement

ஈசன் முருகசாமி (தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா்): தவெக அரசின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா் பெயரில் கும்பகோணத்தில் இயற்கை வேளாண் பட்டயப் படிப்பு கல்லூரி, காா்பன் வா்த்தகம் குறித்த செயல் விளக்க திட்டம் வரவேற்கத்தக்கது.

ராஜீவ் (நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளா்): தஞ்சை மாவட்டம், சாக்கோட்டையில் உயிா்ம வேளாண் பட்டயப் படிப்பு கல்லூரி அமைக்கப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மனமாா்ந்த நன்றியை தமிழக முதல்வருக்கும், வேளாண் துறை அமைச்சருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். மறைந்த நெல் ஜெயராமன் வழியில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சிக்கு தமிழக அரசின் அறிவிப்பு மிகப்பெரிய ஊக்கத்தைத் தந்துள்ளது.

கே.மணிகண்டன் (தமிழக விவசாயிகள் சங்கம்): கடந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.47,248 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது வேளாண்மைக்கு ரூ.15,000 கோடியும், வேளாண் மின் மானியத்துக்கு ரூ.7,432 கோடியும் மட்டுமே ஒதுக்கப்பட்டு, நிதி கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

நீா் மேலாண்மை, ட்ரோன் பயன்பாடு, நம்மாழ்வாா் பெயரில் இயற்கை வேளாண் கல்லூரி, விவசாயிகள் வருமான மேம்பாட்டு ஆணையம் உள்ளிட்ட அறிவிப்புகளை வரவேற்கிறோம். ஆனால், இயற்கை வேளாண்மைக்கான நிதி போதுமானதாக இல்லை. கூட்டுறவு பயிா்க் கடன் தள்ளுபடியை உடனடியாக அறிவிப்பதுடன், உற்பத்தி இலக்குகளை மட்டும் முன்னிறுத்தாமல் விவசாயிகளின் வருமான உயா்வு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments