FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நோக்கத்தை நிறைவேற்றாத வேளாண் நிதிநிலை அறிக்கை: அன்புமணி

தவெக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை நோக்கத்தை நிறைவேற்றாதது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்திருப்பது...

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:19 pm IST
பாமக தலைவா் அன்புமணி - கோப்புப்படம்
பகிர்:

தவெக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை நோக்கத்தை நிறைவேற்றாதது மற்றும் கொள்முதல் விலை, பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, வேளாண் துறைக்கான நிதி ரூ.470.92 கோடி குறைக்கப்பட்டுள்ளது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் சார்பின் ஆறாம் முறையாகவும், தவெக அரசின் சார்பில் முதல் முறையாகவும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளைப் பார்க்கும் போது எந்த நோக்கத்திற்காக வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று பாமக 13 ஆண்டுகள் போராடி வெற்றி பெற்றதோ, அந்த நோக்கத்தில் ஒரு விழுக்காடு கூட நிறைவேறவில்லை. இந்த நிதிநிலை அறிக்கை உழவர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பும், வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடும் கணிசமாக குறைக்கப்பட்டிருக்கிறது. வேளாண்துறைக்கு மட்டும் திமுக அரசில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.15,167.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அதை விட ரூ.470.92 கோடி குறைவாக ரூ.14,696.70 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் 20 துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.58,374 கோடி என்றும், இது இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மதிப்பான ரூ.47,248 கோடியை விட ரூ.11,126 கோடி அதிகம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

Advertisement

Advertisement

உண்மையில் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பு குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள 20 துறைகளில் ஊரக வளர்ச்சித்துறைக்கான நிதி ஒதுக்கீடு மட்டும் இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மதிப்பான ரூ.6,329.29 கோடியிலிருந்து ரூ.11,774 கோடி உயர்த்தி மொத்தம் ரூ.18,103.02 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை நடைமுறையிலிருந்த 100 நாள் வேலைத் திட்டத்திற்கு பதிலாக 125 நாள் வேலைத் திட்டம் அறிமுகம் செய்யபட்டிருப்பதாகவும், இந்தத் திட்டத்திற்கான மத்திய அரசின் பங்கு குறைக்கப்பட்டு, மாநில அரசின் பங்கு உயர்த்தப்பட்டிருப்பதால் தான் இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் கள அளவில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடப்போவதில்லை. இந்த கூடுதல் ஒதுக்கீட்டை கழித்துப் பார்த்தால் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பு ரூ.46,600 கோடி மட்டும் தான். இது இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பான ரூ.47,248 கோடியை விட ரூ.648 கோடி குறைவு ஆகும்.

நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பில் 25% வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அதன்படி நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பான ரூ.4.62 லட்சம் கோடியில் வேளாண் நிதிநிலை அறிக்கைக்காக ரூ.1.16 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதில் பாதியளவு மட்டும் தான் வேளாண்மைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் வேளாண்மைத் துறைக்கு மட்டும் வெறும் ரூ.14,696.70 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதை ஏற்கவே முடியாது.

தவெக ஆட்சிக்கு வந்தால் நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3500, கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4500 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது குறித்து எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. நெல் கொள்முதலை கையாளும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு திமுக ஆட்சியின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில், ரூ.14,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் ரூ.18 கோடி மட்டும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு பார்க்கும் போது நடப்பாண்டில் நெல்லுக்காக தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை உயர்த்தப்படாது என்றே தோன்றுகிறது. இது மிகப்பெரிய ஏமாற்றம்.

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளுடன் உழவர்கள் காத்துக் கிடப்பதைத் தடுக்கவும், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாவதைத் தடுக்கவும் கிடங்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதற்கான திட்டங்களை அறிவிக்காத அரசு, 43,500 விவசாயிகளுக்கு ரூ.10 கோடியில் தார்ப்பாய்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. ரூ.2298 மதிப்புள்ள தார்ப்பாய்களைக் கொண்டு பல டன் எடையுள்ள நெல்லை எவ்வாறு நனையாமல் பாதுகாக்க முடியும்? என்பது தெரியவில்லை.

பயறு வகைகளின் சாகுபடியை 15.19 லட்சம் ஏக்கரில் இருந்து 24.70 லட்சம் ஏக்கராகவும், எண்ணெய் வித்துகளின் சாகுபடி பரப்பை 9.26 லட்சம் ஏக்கரில் இருந்து 14.89 லட்சம் ஏக்கராகவும் உயர்த்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப் படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்காக உழவர்களுக்கு ஊக்கத்தொகை எதுவும் அறிவிக்கப் படவில்லை. பிற பயிர்களுடன் ஒப்பிடும் போது பயறு மற்றும் எண்ணெய் வித்துகள் சாகுபடியில் இலாபம் குறைவாகவே கிடைக்கும் நிலையில், அதை ஈடு செய்யும் அளவுக்கு உழவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்காத நிலையில், இந்த முயற்சி வெற்றி பெறாது. இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல அறிவிப்புகள் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் & அறிவிப்புகளின் நீட்சியாகவே உள்ளன. புதிதாக எதுவும் இல்லை.

நெல் உள்ளிட்ட 10 வகையான பயிர்களில் அதிக விளைச்சல் ஈட்டும் 3 உழவர்கள் வீதம் மொத்தம் 30 பேருக்கு வழங்கப்படும் விருதுகளுக்கு கடலூர் அஞ்சலையம்மாள் பெயர் சூட்டப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் போதாவது பயனுள்ள அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

summary

The Agriculture Budget has been presented for the sixth time on behalf of the Government of Tamil Nadu and for the first time under the TVK government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments