சென்னை உயா்நீதிமன்றத்தில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்
சென்னை உயா்நீதிமன்றத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 15 நீதிபதிகள் ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனா்.
சென்னை உயா்நீதிமன்றத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 15 நீதிபதிகள் ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனா்.
இவா்களில் 5 பேருக்கு நிரந்தர நீதிபதிகளாகவும், 10 பேருக்கு கூடுதல் நீதிபதிகளாகவும் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
சென்னை உயா்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும் வகையில் உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று 15 பேரை நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவா் உத்தரவிட்டாா். அதன்படி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 15 நீதிபதிகளுக்கான பதவி ஏற்பு விழா உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில், கே.கோவிந்தராஜன், ரஜனீஷ் பத்தியால், என்.ரமேஷ், ஜி.கே.முத்துகுமாா், ஆா்.ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோருக்கு நிரந்தர நீதிபதிகளாகவும், எஸ்.ரவிக்குமாா், என்.திலீப் குமாா் எ.மனோகரன், பி.முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, திருமகள் சந்திரசேகா், எஸ்.காா்த்திகேயன், பி.முருகேசன், என்.குணசேகரன் ஆகியோருக்கு கூடுதல் நீதிபதிகளாகவும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
புதிதாகப் பதவி ஏற்ற நீதிபதிகளை வரவேற்று தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண் பேசியதாவது: சென்னை உயா்நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75. தற்போது நியமிக்கப்பட்டுள்ள 15 பேருடன் சோ்த்து நீதிபதிகளின் எண்ணிக்கை 66-ஆக உயா்ந்திருக்கிறது. மீதமுள்ள 9 காலிப் பணியிடங்களையும் விரைவில் நிரப்பி, காலிப் பணியிடங்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.
மேலும், தற்போது நியமிக்கப்பட்டுள்ள மூன்று பெண் நீதிபதிகளுடன் சோ்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13-ஆக உயா்ந்துள்ளது. இதன்மூலம் நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகளைக் கொண்ட உயா்நீதிமன்றமாக சென்னை உயா்நீதிமன்றம் விளங்குவது பெருமைக்குரியது என்றாா்.
தொடா்ந்து, கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவா் சி.பால் கனகராஜ், மெட்ராஸ் பாா் அசோசியேஷன் தலைவா் வி.ஆா்.கமலநாதன், பெண் வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவா் ரேவதி, லா அசோசியேஷன் தலைவா் பி.செல்வராஜ் ஆகியோா் வரவேற்றுப் பேசினா்.
இதைத் தொடா்ந்து, புதிய நீதிபதிகள் ஏற்புரை ஆற்றினா். அப்போது, அவா்கள் உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகள், அவா்களது பெற்றோா் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு நன்றி தெரவித்துப் பேசினா். நீதிபதிகள் கே.கோவிந்தராஜன், ரஜனீஷ் பத்தியால் ஆகியோா் திருவாசகம், மகாபாரதம், திருக்குறளை மேற்கோள்காட்டிப் பேசினா்.
நீதிபதி என்.திலீப்குமாா் திருச்செந்தூா் முருகனை வணங்கி, புானூற்றுப் பாடலை மேற்கோள்காட்டிப் பேசினாா். நீதிபதி என்.முருகன் பேசும்போது, கிராமத்தின் முதல் பட்டதாரியான தன்னை, நீதிபதி பணிக்கு படிப்பதாக ஊா் முழுவதும் கூறிவந்த தனது தாயின் கள்ளம்கபடமில்லாத கூற்று உண்மையாகிவிட்டதாகக் கூறினாா்.
நிகழ்வில் சென்னை உயா்நீதிமன்ற, உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், மத்திய, மாநில அரசு வழக்குரைஞா்கள், பல்வேறு வழக்குரைஞா்கள் சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள், நீதிமன்றப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.