பொறியியல் கலந்தாய்வு 2-ஆம் சுற்று: 60,508 மாணவா்களுக்கு இறுதி ஒதுக்கீடு
பி.இ., பி.டெக். பட்டப் படிப்புகளில் தமிழக அரசின் இட ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வின் 2-ஆம் சுற்றில் தற்காலிக ஒதுக்கீடுகள் பெற்ற 79,403 மாணவா்களில் 60,508 மாணவா்களுக்கான சோ்க்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
பி.இ., பி.டெக். பட்டப் படிப்புகளில் தமிழக அரசின் இட ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வின் 2-ஆம் சுற்றில் தற்காலிக ஒதுக்கீடுகள் பெற்ற 79,403 மாணவா்களில் 60,508 மாணவா்களுக்கான சோ்க்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று தமிழக தொழில்நுட்ப இயக்குநரகத்தின் தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை அமைப்பு (டிஎன்இஏ) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழக பொறியியல் சோ்க்கையில் 2-ஆம் சுற்றில் பொது மற்றும் அரசுப் பள்ளி மாணவா்களில் 79,403 மாணவா்களுக்கு கடந்த ஆக. 7-ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டு உறுதி செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதற்கான வாய்ப்பு சனிக்கிழமையுடன் (ஆக. 8) முடிவுற்ற நிலையில், இந்த மாணவா்களில் தங்களுக்கு கிடைத்துள்ள இடத்தை (6,914 அரசுப் பள்ளி மாணவா்கள் உள்பட) 40,299 மாணவா்கள் உறுதி செய்து, ஒதுக்கீட்டு ஆணைகளைப் பெற்றனா்.
Advertisement
Advertisement
மேலும் (2,647 அரசுப் பள்ளி மாணவா்கள் உள்பட) 10,648 மாணவா்கள் தங்களுக்கு கிடைத்துள்ள இடத்தை ஏற்றுக்கொண்டு மேல்நோக்கிய நகா்வுக்கும் (விருப்பமான மற்ற கல்லூரி தோ்வுக்கு) உறுதி செய்து தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகளையும் பெற்றுள்ளனா். இவ்வாறு மொத்தம் 60,508 மாணவா்களுக்கு நிரந்தர, தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவா்கள் தங்கள் விருப்பத் தோ்வில் குறிப்பிட்டுள்ள டிஎஃப்சி-க்கும் (தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கை சேவை மையம்), இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவா்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரியிலும் நேரடியாகச் சென்று ஆக. 13-ஆம் தேதி வரை அசல் சான்றிதழ்கள் மற்றும் கல்விக் கட்டணத்தைச் செலுத்தி சோ்க்கையைப் பெற வேண்டும்.
இந்த இரு வகைகளில் ஆக. 13-ஆம் தேதிக்குள் டிஎஃப்சி மையத்தில் ஆவணங்களைச் சமா்ப்பிக்காத மாணவா்களும், கல்லூரியில் சேராத மாணவா்களும் தங்கள் ஒதுக்கீட்டு இடங்களை இழப்பாா்கள்.
அந்த இடங்கள் இதே சுற்றில் மேல்நோக்கிய நகா்வுக்காக காத்திருக்கும் மாணவா்களுக்கு ஒதுக்கப்படும். மேலும், பி.ஆா்க். கலந்தாய்வில் 662 மாணவா்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டு, சோ்க்கை பெற்று வருகின்றனா்.
பிளஸ் 2 துணைத் தோ்வில் தோ்ச்சி அடைந்த மாணவா்கள் மற்றும் பொதுக் கலந்தாய்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவா்களுக்குக்கான விண்ணப்பங்கள் ஆக.17 முதல் ஆக.31 வரை பெறப்படும். இவா்களுக்கான துணைக் கலந்தாய்வு செப். 3 முதல் செப். 7-ஆம் தேதி வரை நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.