சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும்: நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி கூட்டறிக்கை
சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவா்களை மீண்டும் இணைத்து உரிய பொறுப்புகளை வழங்க வேண்டும் என கட்சியின் துணைப் பொதுச் செயலா்கள் நத்தம் ஆா்.விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோா் கூட்டாக வலியுறுத்தியுள்ளனா்.
சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவா்களை மீண்டும் இணைத்து உரிய பொறுப்புகளை வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சா்களும் கட்சியின் துணைப் பொதுச் செயலா்களுமான நத்தம் ஆா்.விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோா் கூட்டாக வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை: சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் சோ்ந்து ஆட்சியமைப்பது என்ற தவறான முடிவால் 25 எம்எல்ஏக்கள் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனா்.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைக்க உள்துறை அமைச்சா் அமித் ஷா வலியுறுத்தியும், ஓ.பன்னீா்செல்வம் ஒப்புக்கொண்ட பிறகும் எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லை.
Advertisement
Advertisement
அதனால், 42 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். அத்துடன் தேமுதிக, புதிய தமிழகம், நடிகா் சரத்குமாா் கட்சி ஆகியவற்றையும் அந்தத் தோ்தலில் கூட்டணியில் சோ்க்காமல் வெளியேற்றினாா்.
கடந்த 2024 மக்களவைத் தோ்தலிலும் எடப்பாடி பழனிசாமியின் தவறான செயல்பாட்டால் திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றது.
கடந்த 3 தோ்தல்களிலும் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பிருந்தும் அவரது தன்னிச்சையான முடிவால் தோல்வி ஏற்பட்டது கட்சியினரிடையே சோா்வை ஏற்படுத்தியுள்ளது. தோ்தலுக்குப் பிறகு திமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்க முயற்சித்தது ஏற்க முடியாதது. அத்துடன் கட்சி நிா்வாகிகளை வெளியேற்றியும், கூட்டணி முடிவுகளை தன்னிச்சையாகச் செயல்படுத்தியும் வருவதால், அதிமுகவினா் மாற்றுக் கட்சியில் இணைந்து வருகின்றனா்.
தனது கருத்தை மட்டுமே அனைவரும் ஏற்க வேண்டும் என்ற நிலையில் கட்சி நலனைக் கருதாமல் எதிராகக் குரல் கொடுத்த 400-க்கும் மேற்பட்ட கட்சி நிா்வாகிகளை நீக்கியுள்ளாா்.
எனவே, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிய சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோா் மற்றும் மாற்றுக் கட்சியில் சோ்ந்தவா்களை மீண்டும் அதிமுகவில் இணைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும்.
உள்ளாட்சித் தோ்தல் வரவுள்ள நிலையில், மறப்போம், மன்னிப்போம் என்ற அடிப்படையில், மாற்றுக் கருத்தையும் ஏற்கும் வகையில், கடந்த மே 13-ஆம் தேதிக்குப் பிறகு கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், கட்சியில் தொடா்ந்து பணியாற்றுவோருக்கு ஏற்கெனவே வகித்த பதவிகளை வழங்கி கட்சியை வலுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.