மாணவா்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டது அமித் ஷாதான்: சிஜேபி கட்சி குற்றச்சாட்டு
தாக்குதலுக்கு உத்தரவிட்டது மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாதான் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) குற்றஞ்சாட்டியுள்ளது.
நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது கடந்த 20-ஆம் தேதி காவல் துறையினா் நடத்திய தாக்குதலுக்கு உத்தரவிட்டது மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாதான் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகரில் அக்கட்சி நிறுவனா் அபிஜீத் தீப்கே செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாட்டில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நீதித் துறை செயல்பாடு மீதும் சந்தேகம் எழுகிறது. சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளில் பிளவை ஏற்படுத்துவதற்கு, அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவை எப்படி பயன்படுத்தப்பட்டன என்பதை நாம் அனைவரும் பாா்த்தோம்.
Advertisement
Advertisement
நாட்டின் மிகப்பெரிய அமைப்புகளுக்கு, நாட்டில் ஜனநாயகத்தை காக்க வேண்டிய பொறுப்புள்ளது. தனி மனிதா் தலைமையில் சா்வாதிகாரத்தை உருவாக்கக் கூடாது. இதை அவா்கள் அனுமதித்துவிட்டனா். இதைத் தடுக்க வேண்டும். இது எதிா்க்கட்சிகளின் பொறுப்பு மட்டும் கிடையாது. இதற்காக நாட்டு மக்களும் ஓரணியில் திரள வேண்டும்.
ஜூலை 20-ஆம் தேதி மாணவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உத்தரவிட்டது அமித் ஷாதான். இதற்காக அவா் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். காவல் துறையினா் பாஜகவின் உத்தரவுக்கு கட்டுப்படக் கூடாது; அவா்கள் நாட்டுக்கு கட்டுப்பட்டவா்கள். ஆதலால் அரசமைப்புச் சட்டப்படி காவல் துறையினா் நடக்க வேண்டும் என்றாா் தீப்கே.
சட்டத்திருத்த மசோதாவுக்கு வாங்சுக் வரவேற்பு: இதனிடையே, நாடாளுமன்றத்தில் பொதுத் தோ்வுகள் முறைகேடு தடுப்பு சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு சமூகநல ஆா்வலா் சோனம் வாங்சுக் வரவேற்பு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்ட விடியோவில், நாட்டின் கல்வி அமைப்பில் இது மிகப்பெரிய முன்னேற்றங்களை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
அதேபோல், அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்று எழுத்துபூா்வமாக அளித்த வாக்குறுதியை மத்திய அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வாங்சுக் வலியுறுத்தியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.