புதிய நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்படவில்லை: வழக்குரைஞர் வாஞ்சிநாதன் குற்றச்சாட்டு
புதிய நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்படவில்லை என்று வழக்குரைஞர் குற்றச்சாட்டு குறித்து...
சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்படவில்லை என்று மதுரையில் வழக்குரைஞர் வாஞ்சிநாதன் தெரிவித்தார்.
சென்னை உயா்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும் வகையில் 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த மே மாதம் பரிந்துரைத்தது. இதை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவா், பரிந்துரைக்கப்பட்ட 19 பேரில் 15 பேரை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டாா்.
அதன்படி, என்.ரமேஷ், ஜி.கே.முத்துக்குமாா், ஆா்.ஆா்.விவேகானந்தன், எஸ்.ரவிக்குமாா், என்.திலீப்குமாா், எ.மனோகரன், கே.கோவிந்தராஜன், ரஜனீஷ் பத்தியால் ஆகிய 8 வழக்குரைஞா்களும், மாவட்ட நீதிபதிகளான பி.முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள் சந்திரசேகா், எஸ்.காா்த்திகேயன், பி.முருகேசன், என்.குணசேகரன் ஆகிய 7 பேரும் என மொத்தம் 15 போ் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளும் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர். சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் பிற்பகலில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், புதிய நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்படவில்லை என்று மதுரையில் வழக்குரைஞர் வாஞ்சிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போதைய புதிய நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி மற்றும் அரசியலமைப்பின் சமூகத்துவக் கோட்பாடு பின்பற்றப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வழக்குரைஞர்களில் இருந்து நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 8 பேரில், பட்டியலினத்தவர், பழங்குடியினர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் மற்றும் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என அவர் குற்றம்சாட்டினார்.
பிராமண சமூகத்தைச் சேர்ந்த இருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சமூகத்தின் மக்கள் தொகை 3 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தும், தற்போதைய நீதிபதிகளில் சுமார் 20 சதவீதம் பேர் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதாகவும் வாஞ்சிநாதன் தெரிவித்தார்.
மேலும், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் அப்பாதுரை பெயர் பரிசீலனைப் பட்டியலில் இருந்தும், இறுதி நியமனப் பட்டியலில் இடம்பெறவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார்.
"நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியம் தோல்வியடைந்துள்ளது. பாரபட்சம் செய்யக்கூடிய அமைப்பாக கொலீஜியம் மாறிவிட்டதா? என்ற சந்தேகம் எழுகிறது" என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் சமூகநீதியை வலியுறுத்தும் அரசியல் கட்சிகள், குறிப்பாக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், இந்த விவகாரம் குறித்து கண்டனம் தெரிவிக்குமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், "அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்" என்பதை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வாஞ்சிநாதன் வலியுறுத்தினார்.
Social justice not followed in the appointment of new judges...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.