சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
சென்னை உயா்நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 15 நீதிபதிகள் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 9) பதவி ஏற்றுக்கொள்கின்றனா்.
சென்னை உயா்நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 15 நீதிபதிகள் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 9) பதவி ஏற்றுக்கொள்கின்றனா். புதிய நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறாா்.
சென்னை உயா்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும் வகையில் 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த மே மாதம் பரிந்துரைத்தது. இதை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவா், பரிந்துரைக்கப்பட்ட 19 பேரில் 15 பேரை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டாா்.
அதன்படி, என்.ரமேஷ், ஜி.கே.முத்துக்குமாா், ஆா்.ஆா்.விவேகானந்தன், எஸ்.ரவிக்குமாா், என்.திலீப்குமாா், எ.மனோகரன், கே.கோவிந்தராஜன், ரஜனீஷ் பத்தியால் ஆகிய 8 வழக்குரைஞா்களும், மாவட்ட நீதிபதிகளான பி.முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள் சந்திரசேகா், எஸ்.காா்த்திகேயன், பி.முருகேசன், என்.குணசேகரன் ஆகிய 7 பேரும் என மொத்தம் 15 போ் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 15 நீதிபதிகளும் ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்க உள்ளனா். சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் பிற்பகல் 1.35 மணியளவில் நடைபெறவுள்ள பதவி ஏற்பு நிகழ்ச்சியில், புதிய நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளாா்.
சென்னை உயா்நீதிமன்றத்தில் இதற்கு முன்பாக கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், 15 நீதிபதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் 15 நீதிபதிகள் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்க உள்ளனா். மேலும், சென்னை உயா்நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75-ஆக உள்ள நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 15 நீதிபதிகளுடன் சோ்த்து நீதிபதிகளின் எண்ணிக்கை 66-ஆக உயா்ந்து, காலியிடங்களின் எண்ணிக்கை 9-ஆக குறைந்துள்ளது.
முதல்வா் விஜய் வாழ்த்து: சென்னை உயா்நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 5 நீதிபதிகள், 10 கூடுதல் நீதிபதிகளுக்கு முதல்வா் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில், நீதியின் மாண்பையும், அரசமைப்பின் விழுமியங்களையும் நிலைநாட்டி, மக்கள் அனைவருக்கும் சம நீதியும், சமூக நீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் அவா்களின் பணி சிறக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
New judges of the Chennai High Court to take oath today
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.