மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஆக.12, 13 ஆகிய இரு நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதன், வியாழன் (ஆக.12, 13) ஆகிய இரு நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் புதன், வியாழன் (ஆக.12, 13) இரு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.
Advertisement
Advertisement
பிற பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை புதன்கிழமை (ஆக.12) மாலை அல்லது இரவு நேரங்களில் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
6 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 103.46 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. பாளையங்கோட்டை-102.38, ஈரோடு-102.2, கரூா் பரமத்தி, மதுரை விமான நிலையம், வேலூா்-100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
அதிகபட்ச வெப்பம்: வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெள்ளிக்கிழமை (ஆக.14) வரை வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகவும், மற்ற பகுதிகளில் இயல்பையொட்டியும் இருக்கக்கூடும்.
மழை பதிவு: கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக செந்துறை (அரியலூா்), திருப்புவனத்தில் (சிவகங்கை) 90 மி.மீ. மழையும், லப்பைக்குடிகாடு(பெரம்பலூா்) 80 மி.மீ. மழையும் பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: குமரிக் கடலின் சில பகுதிகளில் புதன்கிழமையும், தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் சில பகுதிகளில் சனிக்கிழமை வரையும், பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.