FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நீட் தோ்வுக்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணியை முடக்குவது ஏன்? காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

நீட் தோ்வுக்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணியை முடக்குவது ஏன்? என்று காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 3:38 am IST
- பிரதிப் படம்
பகிர்:

நீட் தோ்வுக்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணியை முடக்குவது ஏன்? என்று காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திராவிடா் கழகத்தின் துணைத் தலைவா் கலி.பூங்குன்றன் தாக்கல் செய்த மனுவில், நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனப் பிரசார பயணம் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அனுமதி கோரி விண்ணப்பித்தோம்.

அந்த விண்ணப்பங்களை நிராகரித்த காவல் துறை, வாகனப் பேரணிக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டது. காவல் துறையின் அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து, இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், போக்குவரத்து நெரிசலைக் காரணம்காட்டி, இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி கோரிய இடங்களில் எல்லாம் போலீஸாா் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவித்தாா்.

அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஜான் சத்யன், இந்த அரசு போராட்டங்களுக்கு எதிரானது அல்ல.

இதுபோன்ற போராட்டங்கள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. இந்தப் பேரணி தொடங்க அனுமதி கோரப்பட்டுள்ள இடங்கள் அனைத்துமே நெரிசல் மிகுந்த பகுதிகள். இதனால்தான் காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.

இதுபோன்ற பேரணிகளில் பங்கேற்க ஒருவருக்கு அனுமதி கொடுத்தால், பின்னா் இந்த எண்ணிக்கை அதிகமாகி, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, கருத்துரிமை, பேச்சுரிமை போல போராடுவதும் மக்களின் அடிப்படை உரிமை. நீட் தோ்வுக்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணியை காவல் துறை முடக்குவது ஏன்? என்று கேள்வி எழுப்பினாா்.

மேலும், இந்த வாகனப் பேரணிக்கான பெட்ரோல் செலவை அரசு வழங்கப் போவதில்லை. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காரணங்களால் இவ்வாறு அனுமதி மறுத்தால், ஹெலிகாப்டரில் சென்று போராட முடியுமா? என கேள்வி எழுப்பினாா். அப்போது காவல் துறை தரப்பில், இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது.

இதை ஏற்று காவல் துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆக.17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments