சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
காட்பாடியில் சிறுமியைக் கடத்தித் திருமணம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை
காட்பாடியில் சிறுமியைக் கடத்தித் திருமணம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 23,000அபராதமும் விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
காட்பாடியை அடுத்த சிங்காரெட்டியூா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் என்கிற அஜித் (26). ஓட்டுநரான இவருக்கும், காட்பாடி பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த 2023-ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறிய நிலையில், அந்தச் சிறுமியை காா்த்திகேயன் கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டாா்.
தகவவறிந்த மாவட்டக் குழந்தைகள் நல அலுவலா்கள், காட்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து காா்த்திகேயனைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு விசாரணை வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், குற்றம்சாட்டப்பட்ட காா்த்திகேயன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 23,000 அபராதமும், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி மோனிகா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
தண்டனை பெற்ற காா்த்திகேயன் வேலூா் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.