மீனாட்சிபுரம் கண்மாய் பறவைகள் சரணாலயமாக்கப்படுமா?
மீனாட்சிபுரம் கண்மாயைப் பறவைகள் சரணாலயமாக மாற்றி பாதுகாக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நமது நிருபர்
தேனி மாவட்டம், போடி அருகே மீனாட்சிபுரம் கண்மாயில் உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதால் கண்மாயைப் பறவைகள் சரணாலயமாக மாற்றி பாதுகாக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம், போடி அருகே மீனாட்சிபுரம் கண்மாய் சுமார் 206 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இந்தக் கண்மாய்க்கு கொட்டக்குடி யாற்றிலிருந்து நீர்வரத்து உள்ளது. இந்த கண்மாய்க்கு உள்ளூர் பறவைகள், வெளிநாட்டு பறவைகள் வலசை வருகின்றன.
Advertisement
Advertisement
இந்தப் பறவை பயிர்களில் உள்ள தீமை செய்யும் பூச்சிகளைப் பிடித்து உண்ணுகின்றன. மேலும், பறவைகளின் எச்சங்கள் தண்ணீரில் கலந்து, அந்த தண்ணீரை விவசாயத்துக்குப் பயன்படுத்துவதால் விளைச்சலில் நல்ல பலன் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். எனவே, இந்தக் கண்மாயை பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பறவையியல் ஆய்வாளர் ந. ரவீந்திரன் கூறியதாவது:
தேனி மாவட்டத்தில் பறவைகள் சரணாலயம் (Birds Sanctuary) அல்லது சமூக பல்லுயிரிய தளமாக (Community Reserve) அறிவித்து பாதுகாக்க வேண்டிய நீர்நிலைகளில் முதன்மையானது மீனாட்சிபுரம் கண்மாய். கண்மாய்க்குள் இருந்த நாட்டு கருவேல மரங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மராமத்துப் பணியின் போது அகற்றப்பட்டது.
அதனால் கண்மாய்க்குள் இருக்கும் மரங்களில் கூடமைத்து இனப்பெருக்கம் செய்து வந்த பறவைகள் ஊருக்குள் இருக்கும் மரங்களிலும் இடம் பெயர்ந்தன.
அதைக் கட்டுப்படுத்தும் வகையில் கண்மாய் தூர்வாரி, அம்மணலைக் கொண்டு கண்மாயின் கொள்ளளவு பாதிக்காத வண்ணம் ஒரு மணல் திட்டு அமைத்து நாட்டுக் கருவேலம், இச்சி உள்ளிட்ட மரங்களை வளர்க்க வேண்டும்.
கண்மாயில்காணப்படும் பறவைகள் குறித்த முக்கிய தகவல்களை ஓரிரு இடங்களில் அறிவிப்புப் பலகையாக வைக்கவேண்டும். நீர்நிலைசார் பல்லுயிர்ச் சூழல் குறித்து தேனி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறியும் வண்ணம் மீனாட்சிபுரம் கண்மாய்க்கு அழைத்து வரப்படவேண்டும். இந்த நடவடிக்கை பல்லுயிரிய சூழல் குறித்த விழிப்புணர்வுக்கும், பாதுகாப்புக்கும் வலுசேர்க்கும் என்றார் அவர்.
56 வகையான பறவைகள்
இந்தக் கண்மாயில் சிறிய நீர்காகம், பெரிய நீர்காகம், உள்ளான், நெடுங்கால் உள்ளான், சங்குவளை நாரை, சாம்பல் நாரை, செந்நாரை, நத்தைக் கொத்தி நாரை, கரண்டிவாயன், வழுவாங்கி, அன்றில், கருந் தலை அன்றில், செந்தலை அன்றில், கூழைக்கடா, புள்ளி மூக்கு வாத்து, பெரிய கொக்கு, நடுத்தரக் கொக்கு, சிறிய நீர்கொக்கு, உன்னிக் கொக்கு, முக்குளிப்பான், நீர்க்கோழி, நாமக்கோழி, தாழைக் கோழி, சிறிய மீன் கொத்தி, வெண்தொண்டை மீன்கொத்தி உள்ளிட்ட சுமார் 56 வகை பறவையினங்கள் உள்ளன.
அழியும் நிலையில்....: சுரண்டிவாயன் (VU) கூழைக்கடா (NT), கருந் தலை அன்றில் (NT), வழுவாங்கி (NT), பனங்காடை (NT) உள்ளிட்ட 5 பறவையினங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள செம்பட்டியலில் (Redlist) உள்ளது.
மீன் பாசிக்குத் தடை: இந்த கண்மாய்க்கு உள்ளூர், வெளியூர் பறவைகள் வந்து செல்வதால், கண்மாயில் உள்ள மீன்களை பறவைகள் பிடித்து வருகிறது. இங்கு மீன் பாசி ஏலம் விற்றால், பறவைகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படும். எனவே இந்த கண்மாயை ஏலம் விடுவதை நிறுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Will the Meenakshipuram irrigation tank be declared a bird sanctuary?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.