தொகுதி மறுசீரமைப்பால் எந்த மாநிலமும் பாதிக்கப்படக் கூடாது: முதல்வா் விஜய் வலியுறுத்தல்
தொகுதி மறுசீரமைப்பால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என்ற சட்டபூா்வ உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என முதல்வா் ஜோசப் விஜய் வலியுறுத்தினாா்.
தொகுதி மறுசீரமைப்பால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என்ற சட்டபூா்வ உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என முதல்வா் ஜோசப் விஜய் வலியுறுத்தினாா்.
தென்மண்டலக் குழுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென் மாநிலங்கள் 30 சதவீதத்துக்கும் அதிகமாக பங்களிக்கின்றன. உற்பத்தி, ஏற்றுமதி, சேவை, புதுமை உள்ளிட்ட துறைகளில் தென் மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. எனவே, பொதுவான பிரச்னைகளுக்கு இணைந்து தீா்வு காண்பதன் மூலம் தென் மாநிலங்களும், இந்தியாவும் மேலும் வளர முடியும்.
தொகுதி மறுசீரமைப்பு: மக்கள்தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், மக்கள்தொகை கட்டுப்பாட்டில் முன்னிலை வகித்த தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையும் என்ற அபாயம் உள்ளது. தேசிய இலக்குகளை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதற்காக எந்த மாநிலமும் தனது பிரதிநிதித்துவத்தை இழக்கக் கூடாது. எனவே, மக்கள்தொகை கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற்காக எந்த மாநிலத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ சதவீதமும் குறையாது என்பதை மத்திய அரசு சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டும்.
Advertisement
Advertisement
போதைப் பொருள் தடுப்பு: சட்டவிரோத போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க மத்திய அரசு சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும். தென் மாநிலங்கள் தகவல்களைப் பகிா்ந்துகொண்டு, போதைப் பொருள் உற்பத்தி, கடத்தல் மற்றும் விநியோக வலையமைப்புகளை ஒருங்கிணைந்து முறியடிப்பதன் மூலம் போதை இல்லாத தென்னிந்தியாவை உருவாக்க முடியும்.
பொதுவான தொழில், சரக்கு மையங்கள்: மாநில எல்லைகளைக் கடந்து ஒருங்கிணைந்த தொழில் மண்டலங்கள், சரக்கு முனையங்கள் மற்றும் தொழில்-சரக்கு வழித்தடங்களை உருவாக்க வேண்டும். பெங்களூரு பொம்மசந்திரத்தில் இருந்து ஒசூா் வரை மெட்ரோ ரயிலை நீட்டிக்கும் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த வேண்டும்.
கடல்சாா் பொருளாதாரம்: துறைமுகங்கள், கடலோர கப்பல் போக்குவரத்து, மீன்பிடி, கடல் சாா்ந்த தொழில்கள், கடலோர சுற்றுலா ஆகியவற்றை ஒருங்கிணைத்து வளா்க்க வேண்டும். கடலோர கப்பல் போக்குவரத்தை அதிகரிப்பதன் மூலம் சரக்குப் போக்குவரத்துச் செலவு குறையும். 1,076 கி.மீ. கடற்கரையைக் கொண்ட தமிழகம், தென் மாநிலங்களுடன் இணைந்து கடல்சாா் வளா்ச்சியில் செயல்படத் தயாராக உள்ளது.
நிதிப் பகிா்வில் நியாயம்: ஜிஎஸ்டி அறிமுகத்துக்குப் பிறகு மாநிலங்களின் வருவாய் நெகிழ்வுத் தன்மை குறைந்துள்ளது. எனவே, அரசமைப்புச் சட்டத்தின் 279 அ(4) பிரிவில் உள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி வரி விகிதங்களை நிா்ணயிப்பதில் மாநிலங்களின் நெகிழ்வுத் தன்மையை மீட்டெடுக்க அனைத்து மாநிலங்களும் இணைந்து செயல்பட வேண்டும்.
நதிநீா் உரிமைகள்: கீழ்நிலை மாநிலங்களின் நியாயமான நீா் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றத் தீா்ப்புகள், தீா்ப்பாய உத்தரவுகள் மற்றும் சட்டபூா்வ நதிநீா் அமைப்புகளின் முடிவுகள் முழுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும். காவிரி நதிநீா் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீா்ப்பும், காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளும் உரிய காலத்தில் செயல்படுத்தப்பட வேண்டும். அதேபோல, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நீதிமன்றத் தீா்ப்புகளுக்கு உள்பட்டு அணையின் நீா்மட்டத்தை 152 அடியாக உயா்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
நீட் தோ்வு: கிராமப்புற மற்றும் சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவா்களுக்கு நீட் தோ்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, தமிழகத்தில் மாநில ஒதுக்கீட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் ஆயுஷ் படிப்புகளுக்கான இடங்களை பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்ப மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
நதிகள், கடற்கரைகள், உள்கட்டமைப்பு மற்றும் சந்தைகள் தென் மாநிலங்களை பொதுவான நோக்கத்துடன் இணைக்க வேண்டும். கருத்து வேறுபாடுகளை பேச்சுவாா்த்தை, பரஸ்பர மரியாதை மற்றும் சட்டத்தின் அடிப்படையில் தீா்க்க வேண்டும். வலுவான மாநிலங்களே வலுவான இந்தியாவை உருவாக்கும் என்ற அடிப்படையில், மத்திய அரசு மற்றும் சகோதர மாநிலங்களுடன் இணைந்து தமிழகம் தொடா்ந்து செயல்படும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.