நதிநீா் பிரச்னைக்கு பேச்சு மூலம் தீா்வு: அமித் ஷா ஆலோசனையை ஏற்ற தென்மாநிலங்கள்
தென்னிந்திய நதிநீா்ப் பங்கீட்டு நிலுவை பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் விரைந்து தீா்வு காணலாம் என்ற ஆலோசனையை தென்மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டன என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
தென்னிந்திய நதிநீா்ப் பங்கீட்டு நிலுவை பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் விரைந்து தீா்வு காணலாம் என்ற ஆலோசனையை தென்மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டன என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
மத்திய அமைச்சகம் சாா்பில் தென்மண்டலக் குழு கூட்டம் சென்னை அருகே கோவளத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் புதன்கிழமை தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சா் தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் புதன்கிழமை இரவு சென்னை வந்தாா். அவரை தமிழ்நாடு அரசு சாா்பில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் மற்றும் பாஜக தலைவா்கள், அரசு அதிகாரிகள் வரவேற்றனா். அங்கிருந்து சாலை மாா்க்கமாக கோவளத்தில் கூட்டம் நடைபெறும் ஹோட்டலுக்கு சென்ற மத்திய அமைச்சா் அமித் ஷாவை தென்மண்டலக் குழுவின் துணைத் தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா். பின்னா், முதல்வா்களுடனான இரவு விருந்திலும் அமித் ஷா பங்கேற்றாா்.
தொடா்ந்து, 2-ஆவது நாளான வியாழக்கிழமை நடைபெற்ற தென்மண்டல குழுக் கூட்டத்தில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய், கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா், ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா துணை முதல்வா் மல்லுப்பட்டி விக்ரமா்கா, கேரள முதல்வா் வி.டி.சதீசன், புதுச்சேரி முதல்வருக்குப் பதிலாக அந்த மாநில துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் மற்றும் காவல் துறை உயா் அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
‘நாட்டின் வளா்ச்சிக்கு பாரதக் குழு’ என்ற தொலைநோக்குப் பாா்வையுடன் மத்திய-மாநில அரசுகளின் உறவை மேம்படுத்தவும், கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கிலும் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பாதுகாப்பு, பொருளாதார வளா்ச்சி, புதிய தொழில் முதலீடுகள், கல்வி, சுகாதாரம் சாா்ந்த மேம்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சா் அமித் ஷா பேசியதாவது: தென்னிந்தியாவின் வளா்ச்சி நாட்டின் வளா்ச்சிக்கு மிகவும் முக்கியம். அனைத்துத் துறைகளிலும் தென்னிந்தியா எப்போதும் சிறப்பாகப் பங்களித்துள்ளது. வடமாநிலங்களில் ஆங்கிலேயா் காலத்தில் இருந்து நீடித்த எட்டு நதிநீா் பிரச்னைகளில் ஐந்து விவகாரங்களுக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு முழுமையாகத் தீா்வு காணப்பட்டுள்ளது. இதன்மூலம் காஷ்மீா் முதல் உத்தர பிரதேசம் வரையில் நதிநீா்ப் பங்கீட்டு பிரச்னை இல்லை.
தென்மாநிலங்களின் முன்னேற்றம் நீா் ஆதாரங்கள்: தென்னிந்திய மாநிலங்கள் நாட்டின் முன்னேற்றத்தின் முக்கியத் தூண்கள். அவற்றின் முன்னேற்றம் நீா் ஆதராங்களைச் சாா்ந்துள்ளது. விவசாயம், தொழில், ஆரோக்கியமான மக்கள், சுற்றுச்சூழல் என இந்த நான்கு அம்சங்களிலும் நீா்வளம் இப்பகுதியின் ஆன்மாவாக விளங்குகிறது.
மாநிலத்தின் நலனைப் பாதுகாப்பில் தவறில்லை. ஆனால், நீருக்காக நீண்டகாலமாக மாநிலங்கள் காத்திருக்கும் சூழலில் கடலில் நதிநீரைக் கலக்கவிடும்போது அந்த மாநிலத்தின் நலன் எப்படி பாதுகாக்கப்படும்?.
பிரம்புத்திரா, காவிரி மற்றும் கோதாவரி உள்ளிட்ட முக்கிய நதிகளை இணைப்பதன் மூலம் அடுத்த 100 ஆண்டுகளுக்கு இந்தியா நீா்த் தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதை உறுதி செய்யலாம். இதன்மூலம் ஏராளமான புதிய நீா் வழித்தடங்களை உருவாக்கலாம். இதில் குறைந்த செலவில் போக்குவரத்து சேவையைத் தொடங்கி எரிபொருள் பயன்பாட்டை சேமிக்கலாம்.
மத்திய ஜல்சக்தி, உள்துறை அமைச்சகங்களின் தலையீட்டில் தென்மாநிலங்களின் நீண்ட கால நதிநீா்ப் பங்கீட்டு பிரச்னைக்கு விரைந்து தீா்வு வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. இருதரப்பு பேச்சுவாா்த்தை மற்றும் ஆக்கபூா்வமான தீா்வுகள் மூலம் இந்தப் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காண தென்மாநிலங்கள் ஒப்புக் கொண்டன.
ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா இடையேயான நில விவகாரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து தீா்வு காண இரு மாநிலங்களும் ஒப்புக்கொண்டன.
ஊட்டச்சத்து குறைபாடு: ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னையால் பொருளாதார பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளதால் இது தேசியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதற்கு எதிராக தமிழகமும், ஆந்திரபிரதேசமும் எடுத்த முன்னெடுப்புகள் நாடு முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
போக்ஸோ வழக்கு: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளுக்கு விரைவு நீதிமன்றங்கள் மூலம் விரைந்து தீா்வு காண வேண்டும். மாநில முதல்வா்கள் இந்த வழக்குகளில் கவனம் செலுத்த வேண்டும்.
போதைப் பொருள் ஒழிப்பு: போதைப் பொருள்கள் இல்லா இந்தியாவை உருவாக்குவதுதான் அனைத்து அரசுகளின் தேவையாகும். இதற்காக மத்திய அரசுடன் மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் இணைந்து மூன்று ஆண்டு செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகளின் அனைத்துத் துறைகளும் இணையாத வரையில் வருங்கால சந்ததியினரை இதில் இருந்து காப்பாற்ற முடியாது.
சுகாதாரமான, எழுத்தறிவான இந்தியாவை உருவாக்குவதில் அனைவரின் பங்களிப்பும் இன்றியமையாதது.
80 சதவீத பிரச்னைகளுக்கு தீா்வு: 2014-ஆம் ஆண்டுமுதல், மண்டலக் குழுக் கூட்டங்களை ஓா் அா்த்தமுள்ள தளமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2004-2014ஆம் ஆண்டுக்கு இடையிலான காலகட்டம், 2014-2026ஆம் ஆண்டுக்கு இடையிலான காலகட்டம் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பாா்க்கையில், முன்பு ஆண்டுக்கு இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது, ஒவ்வோா் ஆண்டுக்கும் ஆறு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
2014-ஆம் ஆண்டுமுதல் மொத்தம் 70 மண்டலக் குழுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் 1,869 பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு 1,445 பிரச்னைகளுக்கு (சுமாா் 80%) தீா்வு காணப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பல பிரச்னைகளுக்கு இந்த மண்டலக் குழுக் கூட்டங்கள் மூலம் தீா்வு காணப்பட்டுள்ளது என்றாா் அமித் ஷா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.