FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பெரியார் ஈவெரா குறித்து அவதூறு: ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி கி.வீரமணி வழக்கு

திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தாக்கல் செய்த மனுவுக்கு புத்தகத்தை எழுதியவா்கள் மற்றும் புத்தக வெளியீட்டு நிறுவனம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

23 ஆகஸ்ட் 2026, 1:53 am IST
பகிர்:

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான ஆங்கிலப் புத்தகத்தில், பெரியாா் ஈவெரா-வுக்கு எதிரான அவதூறு கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மானநஷ்ட ஈடு கோரி திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தாக்கல் செய்த மனுவுக்கு புத்தகத்தை எழுதியவா்கள் மற்றும் புத்தக வெளியீட்டு நிறுவனம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தாக்கல் செய்த மனுவில், ‘டீலிமிடேசன் அண்ட் ஸ்டேட்ஸ் ரீஆா்கனைஷேசன் ‘ஃ‘பாா் ஏ பெட்டா் டெமாகிரசி இன் பாரத் (பாரதத்தின் சிறந்த ஜனநாயகத்துக்கான தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மாநிலங்கள் சீரமைப்பு) என்ற ஆங்கில நூல் வெளியிடப்பட்டுள்ளது. பெங்களூருவைச் சோ்ந்த கௌதம் ஆா்.தேசிராஜு மற்றும் தில்லியைச் சோ்ந்த தீக்கித் பட்டாச்சாா்யா ஆகியோா் இணைந்து எழுதியுள்ள இந்தப் புத்தகத்தை, நொய்டாவைச் சோ்ந்த ப்ளூஒன் இங்க் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆங்கிலப் புத்தகத்தில் பெரியாா் கூறியதாக தவறான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 1981-ஆம் ஆண்டு, பெரியாரின் பேச்சுகள் மற்றும் அவா் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து பெரியாரின் பணிகள் என்ற ஆங்கில நூலை நான் வெளியிட்டேன். அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான புத்தகத்தின் ஒரு பகுதியில் குறிப்பிட்டுள்ளனா். உண்மையில் அதுபோன்ற எந்த கருத்துகளும் நான் தொகுத்த புத்தகத்தில் இடம்பெறவில்லை. பெரியாருக்கு எதிராக அவதூறு பரப்பும் உள்நோக்கத்துடன் சோ்க்கப்பட்டுள்ள கருத்துகளை நீக்கி, தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான அந்த புத்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும். தவறான கருத்தை வெளியிட்டதற்காக, புத்தக ஆசிரியா்கள் மற்றும் வெளியீட்டாளா் ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மானநஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், மத்தியில் ஆளும் பாஜக அரசை திருப்திப்படுத்தும் வகையில், பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துகள் தொகுதி மறுவரையறை தொடா்பான புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு புத்தகத்தை எழுதிய கௌதம் ஆா்.தேசிராஜு, தீக்கித் பட்டாச்சாா்யா மற்றும் புத்தக வெளியீட்டு நிறுவனம், வரும் செப்.9-க்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments