FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

பெண்களுக்கான இட ஒதுக்கீடு உயர தொகுதி மறுசீரமைப்பு அவசியம்: தமிழிசை சௌந்தரராஜன்

பெண்களுக்கான இடஒதுக்கீடு, மக்களவைப் பிரதிநிதித்துவம் உயருவதற்கு தொகுதி மறுசீரமைப்பு அவசியம் என பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

22 ஆகஸ்ட் 2026, 7:47 am IST
பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் - கோப்புப்படம்
பகிர்:

பெண்களுக்கான இடஒதுக்கீடு, மக்களவைப் பிரதிநிதித்துவம் உயருவதற்கு தொகுதி மறுசீரமைப்பு அவசியம் என பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது :

தமிழக மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையும், மக்களவையில் பெண்களின் பிரதிநிதித்துவமும் உயருவதற்கு தொகுதிகள் மறுசீரமைப்பு அவசியம். தொகுதிகள் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் ஏறத்தாழ 200 பெண்கள் மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் ஏற்படும்.

Advertisement

Advertisement

எனவே, மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவ சதவீதம் எந்த விதத்திலும் குறையாது என மத்திய அரசு அறிவித்திருப்பதை ஏற்று, இந்த விவகாரத்தை மேலும் அரசியலாக்காமல், தொகுதிகள் மறுசீரமைப்புக்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு விழா முன்னேற்பாடு பணிகளுக்கு தமிழக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். மாநில அமைச்சா்கள் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு, பணிகளைக் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். ஆன்மிக நகரான மதுரையின் தூய்மையை உறுதி செய்ய வேண்டும். வைகை ஆற்றைத் தூய்மைப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழா்களின் மாநில உரிமைகளை பாஜக ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. தமிழகத்தின் காவிரி நீா் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.

திமுகவைப் போல, தவெகவுடன் பாஜக மோதல் போக்கை கடைப்பிடிக்காது. அதேநேரத்தில், அவா்கள் எங்களை எப்படி அணுகுகிறாா்களோ, அதேபோன்ற அணுகுமுறையையே பாஜகவும் பின்பற்றும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments