FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

திமுக உள்கட்சித் தேர்தல் குறித்து கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளது பற்றி...

மு.க. ஸ்டாலின் - DMK
பகிர்:

திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்குப் பிறகு உள்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படும் என்று இன்றைய திமுக செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

கூட்டத்தில் பேசிய அவர் இதுபற்றி கூறியதாவது,

"ஒவ்வொரு தொகுதியாக பார்த்து குறைகளைக் கண்டறிந்து ஆளை மாற்றுவதைவிட முழுமையான ஒரு சுய பரிசோதனை வேண்டும் என முடிவெடுத்தேன். அந்த வகையில் கழகத்தின் நிர்வாக அமைப்பில் பல மாறுதல்களைச் செய்யவிருக்கிறோம். கடுமையானதாகத்தான் இருக்கும்; சிலருக்கு கசப்பானதாகவும் இருக்கும். கசப்புதான் உடலுக்கு நன்மை செய்யும். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த மாறுதல்கள் அடுத்த நூறாண்டுக்கு கழகம் உயிர்ப்போடு இருப்பதை உறுதி செய்யும்.

Advertisement

Advertisement

தேர்தல் தோல்விக்கு பிறகு, 38 பேர் கொண்ட கள ஆய்வுக் குழுவை அமைத்தேன். தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்டு அதை அறிக்கையாக கொடுத்திருக்கிறார்கள். அது தவிர, தனியாக இணையதளம் உருவாக்கப்பட்டு அதன் மூலமும் பல்லாயிரக்கணக்கான கருத்துகள் பெறப்பட்டு, இவை அனைத்தையும் தொகுத்து நான் முழுமையாக வாசித்து உள் வாங்கியிருக்கிறேன்.

ஊருக்கே வெளிச்சம் கொடுக்கும் விளக்குக்கு, தனக்கு கீழே இருக்கும் இருட்டு தெரியாது. அப்படித்தான் நம்மிடம் இருந்த தவறுகளை கண்டறியத் தவறிவிட்டோம்.

இந்தக் கருத்துகளின் அடிப்படையில - திட்டங்களை வகுக்க, தங்கம் தென்னரசு தலைமையில, மறுசீரமைப்புக் குழுவை அமைத்தேன்.

அந்தக்குழு அறிவாலயத்தில் பல நாள் கூடி, ஒவ்வொரு பிரச்சனையாக ஆய்வு செய்து, இடைக்கால அறிக்கையை என்னிடம் கொடுத்தார்கள். முக்கியமான தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து தீர்மானமாக உருவாக்கியுள்ளோம்.

இளைஞர்கள், பெண்கள் நம்பிக்கையை மீண்டும் நமக்கு பெற்றுத் தருவது போல நம் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

இனி வரும் நிர்வாகிகளுக்கு, அந்தந்த பொறுப்புகளுக்கு ஏற்ப வயது வரம்பையும், பதவிக்காலத்தையும் அறிமுகப்படுத்த போகிறோம்.

புதுமுகங்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் பொறுப்புகளை வழங்கப் போகிறோம்.

விரைவில் புதிய உறுப்பினர் சேர்க்கையை நாம் தொடங்க வேண்டும். உறுப்பினர் சேர்க்கை நேர்மையானதாக - உண்மையானதாக அமைய வேண்டும்.

உறுப்பினர் சேர்க்கைக்கு பிறகு அனைத்து மட்டத்திலும் உட்கட்சித் தேர்தலை முறையாக நடத்துவோம். தகுதி வாய்ந்த புதிய நிர்வாகிகள் வெற்றி பெற்று வருவார்கள்.

நியமனங்களாக இல்லாமல் தேர்தல் மூலமாக வெல்பவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. கட்சியை மறுசீரமைப்பு செய்வது மூலமாக மட்டும்தான், நாம் மீண்டும் அரசியல் வெற்றியை பெற முடியும்" என்று கூறினார்.

அதேபோல திமுகவில் உறுப்பினர் சேர்க்கைக்கு பிறகு உள்கட்சித் தேர்தல் மூலமாக நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.

வயதுக்கு ஏற்றாற்போல அவரவர் திறமைக்கு ஏற்றாற்போல கட்சியின் தலைவரால், பதவிகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.

summary

When will the DMK internal elections be held: M.K. Stalin makes an announcement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments