FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

எம்.எல்.ஏ-க்களுக்கான உதவியாளர்களை அரசு தேர்வு மூலம் ஒப்பந்த ஊழியர்களாக நியமிக்க வேண்டும்: எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வலியுறுத்தல்

எம்.எல்.ஏ-க்களுக்கான உதவியாளர்களை அரசு தேர்வு மூலம் ஒப்பந்த ஊழியர்களாக நியமிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தியிருப்பது தொடர்பாக...

எஸ்.எஸ். ஹாரூன் ரசீது - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: எம்.எல்.ஏ-க்களுக்கான உதவியாளர்களை அரசு தேர்வு மூலம் ஒப்பந்த ஊழியர்களாக நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை கூறியதாவது:

தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தொகுதி மக்களின் கோரிக்கைகள், மனுக்கள், அரசு நலத்திட்டங்கள் மற்றும் தொகுதி வளர்ச்சிப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக உதவியாளர் வழங்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது.

Advertisement

Advertisement

அதேவேளையில், இந்த உதவியாளர் பணிக்காக அரசின் சார்பில் நிதி ஒதுக்கப்படும் நிலையில், ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் தனிநபர்களை நியமிக்கும் நடைமுறையைத் தவிர்த்து, அரசு தேர்வு மூலம் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுத்து ஒப்பந்த ஊழியர்களாக நியமிக்க வேண்டும்.

அரசுப் பணம் என்பது மக்களின் பணம். எனவே, அந்தப் பணத்தில் வழங்கப்படும் ஊதியம் பெறும் பணியிடங்கள் வெளிப்படையான முறையில் நிரப்பப்படுவது அவசியம். அரசு தேர்வு மூலம் நியமனம் செய்வதன் மூலம் அரசியல் சார்பு, உறவினர் நியமனம், தனிப்பட்ட பரிந்துரை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு இடமில்லாமல், தகுதி மற்றும் திறமை அடிப்படையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க முடியும்.

மேலும், தேர்வு செய்யப்படும் உதவியாளர்களின் கல்வித் தகுதி, கணினி அறிவு, தமிழ் மொழித் திறன், அரசு நிர்வாக நடைமுறைகள் குறித்த அறிவு மற்றும் பொதுமக்களின் மனுக்களை கையாளும் திறன் ஆகியவற்றை அரசு நிர்ணயிக்க வேண்டும்.

தொகுதி மக்களின் மனுக்களைப் பெற்று, அவற்றை உரிய அரசு அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்து, அதன் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து, சட்டமன்ற உறுப்பினருக்கு அறிக்கை அளிப்பது உள்ளிட்ட பணிகள் உதவியாளரின் பொறுப்புகளாக வரையறுக்கப்பட வேண்டும்.

இந்த நியமனம் சட்டப்பேரவை உறுப்பினரின் பதவிக்காலத்துடன் இணைந்த ஒப்பந்தப் பணியாக இருக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினரின் பதவிக்காலம் முடிவடைந்தால், அந்த ஒப்பந்தமும் முடிவடையும் வகையில் விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் ஒருபுறம் பேரவை உறுப்பினர்களுக்கு தேவையான நிர்வாக உதவி கிடைக்கும்; மறுபுறம் தகுதியான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாகும். அதே நேரத்தில் அரசின் நிதி பயன்பாட்டிலும் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும்.

எனவே, தமிழக அரசு உடனடியாக உரிய விதிமுறைகளை வகுத்து, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒரு உதவியாளரை அரசு நடத்தும் வெளிப்படையான தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்து, ஒப்பந்த ஊழியராக நியமிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

summary

Assistants for MLAs should be appointed as contract staff through a government selection process: S.S. Haroon Rasheed urges

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments