இ20 பெட்ரோலால் எகிறும் முட்டை விலை... எத்தனாலுக்கும் முட்டைக்கும் என்ன தொடர்பு?
எத்தனால் கலந்த இ20 பெட்ரோலால் எகிறும் முட்டை விலையைப் பற்றி...
எத்தனால் கலந்த இ20 பெட்ரோலால் எகிறும் முட்டை விலை மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தற்போது இ20 எனப்படும் 20 சதவிகிதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனி செய்யப்பட்டு வருகிறது. அனைத்து வாகனங்களுக்கும் எத்தனால் கலந்த பெட்ரோலையே நாம் பயன்படுத்துவதால், மைலேஜ் குறைவது, வாகன என்ஜின்கள் பாதிப்படைப்பது போன்ற பல சர்ச்சைகள் எழுந்தன.
இதற்கிடையில், எத்தனால் தயாரிப்பதற்கு அதிகளவில் கரும்பு தேவைப்படுவதால் சர்க்கரை உற்பத்தி கடுமையான அளவில் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் சர்க்கரை அதிகளவில் விலை உயர்ந்ததாகவும் மக்கள் கொந்தளித்தனர்.
Advertisement
Advertisement
எத்தனால் பெட்ரோல் தொடர்பாக பல சர்ச்சைகள் இருந்தாலும் அசைவ விரும்பிகளின் பிரதான தேர்வாக இருக்கும் முட்டையின் விலை உயர்வு ஒரு புது பிரச்னையை கிளப்பியிருக்கிறது.
எத்தனால் உற்பத்திக்காக கரும்பைத் தவிர்த்து மக்காச்சோளமும் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் கோழி தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக முட்டையின் விலை 35 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய பண்ணை விலை ஒரு முட்டைக்கு சுமார் ரூ. 7 ஆகவும், சில்லறை விலை ரூ. 8.50 முதல் ரூ 9 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
இணையதள விற்பனை தளங்களில் முட்டை விலை ரூ. 7 லிருந்து ரூ. 14 வரை அதிகரித்து விற்கப்படும் நிலையில், முட்டையின் தேவை குளிர்காலங்களில் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றும், முட்டை விலை மட்டுமின்றி கறிக்கோழியின் விலையும் இரு மடங்கு அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
எத்தனால் உற்பத்திக்கு மக்காச்சோளம் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டு தீவனங்களின் உற்பத்தி செலவு தாறுமாறாக உயர்ந்துள்ளது.
உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் நிமுபென் ஜெயந்திபாய், கடந்தாண்டு மக்களவையில் பேசுகையில், 2024-25-ஆம் ஆண்டில் எத்தனால் உற்பத்திக்காக 125.75 லட்சம் மெட்ரிக் டன் மக்காச்சோளம் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டன் மக்காச்சோளத்தின் விலை சுமார் ரூ. 14,000-லிருந்து கிட்டத்தட்ட ரூ 26,500 வரை, 20 சதவிகிதம் வரை விலை உயர்ந்திருக்கிறது.
மக்காச்சோளத்தின் தேவை அதிகரிப்பால் தீவனங்களில் விலை உயர்வு, நேரடியாக முட்டையின் சில்லறை விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தீவன விலை உயர்வை சமாளிக்க முடியாமல் சிறு மற்றும் நடுத்தர கோழி பண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் முன்பைவிட முட்டையின் தேவை அதிகமாகியுள்ளது. உடற்பயிற்சி செய்பவர்கள், பேச்சலர்களின் பிரதான தேர்வாக முட்டை மாறியிருக்கும் நிலையில், விலை உயர்வு பலரையும் வாயடைக்க வைத்திருக்கிறது. மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அரசுப் பள்ளிகளில் ஊட்டச்சத்துக்காக நாள்தோறும் முட்டை வழங்கப்பட்டு வருவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அச்சம் எழுந்துள்ளது.
எத்தனால் கலந்த இ20 பெட்ரோல் வாகன ஓட்டிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், எத்தனாலின் தேவையால் முட்டை, சர்க்கரை ஆகியவற்றின் விலை உயர்வும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
India's eggs are getting costlier, and a key poultry feed ingredient is at the heart of the problem. As more maize is diverted to ethanol production, poultry farmers are facing higher feed costs. This is raising questions over whether the pressure on egg prices could intensify when winter demand picks up.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.