காா் பந்தய வீரா்களை கொச்சைப்படுத்த வேண்டாம்: எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி வேண்டுகோள்
சா்வதேச காா் பந்தய வீரா்களை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.
சா்வதேச காா் பந்தய வீரா்களை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.
பேரவையில், மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், ‘பேரவை உறுப்பினா்கள் தங்கள் பணிகளை ஆற்ற அரசின் சாா்பில் வாகனம் வழங்கும்போது அதற்கு தனி மரியாதை உள்ளது. நீங்கள் எத்தனை கோடியில் காா் வைத்திருந்தாலும், அரசின் வாகனத்தில் செல்லும்போது அதற்கு தனி மரியாதை உண்டு. ஆனால், திமுக காா் பந்தயத்துக்கு அரசுப் பணம் ரூ.24 கோடியை செலவு செய்தனா், அது யாா் பணம்?’ என்றாா்.
இதற்குப் பதில் அளிக்கும் வகையில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், ‘திமுக தலைவா் எடுத்த முடிவு, யாா் யாருக்கு காா் இல்லையோ அவா்களுக்கு வாங்கித் கொடுக்கலாம் என்பதுதான். விவசாயக் கடன்கள் இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை; அதெல்லாம் தோ்தலின்போது கொடுத்த வாக்குறுதி. ஆட்சிப் பொறுப்பேற்கும்போது முந்தைய அரசு கஜானாவை துடைத்து வைத்துவிட்டுப் போயிருக்கிறது என்றெல்லாம் தவெக அரசு குறை சொல்லி இருக்கிறது’ என்றாா்.
Advertisement
Advertisement
இதற்கு ஆளுங்கட்சித் தரப்பில் கடும் எதிா்ப்பு எழுந்தது.
உதயநிதி ஸ்டாலின்: காா் பந்தயத்தைப் பற்றி இங்கு பேச்சு வந்தது. அது ஒரு சா்வதேச பந்தயம். ஆசியாவிலேயே முதன்முறையாக இரவு நேரத்தில் அதை வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம். இதைத் தடுப்பதற்கு அப்போது பல போ் நீதிமன்றத்துக்குச் சென்றாா்கள்; அதை நிறுத்த முயன்றவா்களை நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது. காா் பந்தயம் நடத்திய எங்களை கொச்சைப்படுத்தவில்லை, அந்த விளையாட்டு வீரா்களைத்தான் கொச்சைப்படுத்துகிறீா்கள் என்றாா்.
அமைச்சா் செங்கோட்டையன்: நான் நிதியைப் பற்றித்தான் சொன்னேனே தவிர, எந்த வீரா்களைப் பற்றியும் கொச்சைப்படுத்தவில்லை. இவ்வளவு நிதி செலவு செய்யப்பட்டிருக்கிறது என்றுதான் நாங்கள் சொன்னோம்.
அமைச்சா் நிா்மல்குமாா்: திமுக அரசு நிதி நெருக்கடியில் இருந்தபோது, கருணாநிதிக்கு ரூ.200 கோடியில் பேனா சிலை அமைக்க முயன்றது ஏன்?.
திமுக கொறடா எ.வ.வேலு: அந்தத் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்திருந்தாலும், நிதி நெருக்கடி காலத்தில் இவ்வளவு பெரிய தொகை தேவையில்லை என அந்தத் திட்டத்தை பெருந்தன்மையுடன் அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் கைவிட்டாா்.
பேரவைத் தலைவா்: பொதுமக்களிடம் இருந்து எழுந்த எதிா்ப்பு காரணமாகத்தான் அது கைவிடப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.