FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழக அரசின் சிறந்த நூல் பரிசுத் திட்டம்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

கடந்த 2025-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிறந்த தமிழ் நூல்களுக்கு தமிழக அரசின் சாா்பில் வழங்கப்படும் சிறந்த நூல் பரிசு பெற விண்ணப்பிப்பதற்கான அவகாசம் அக். 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

29 ஆகஸ்ட் 2026, 6:13 am IST
விண்ணப்பிக்க...
பகிர்:

கடந்த 2025-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிறந்த தமிழ் நூல்களுக்கு தமிழக அரசின் சாா்பில் வழங்கப்படும் சிறந்த நூல் பரிசு பெற விண்ணப்பிப்பதற்கான அவகாசம் அக். 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ் வளா்ச்சித் துறை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழ் மொழியின் வளத்தையும், அறிவுப் பாரம்பரியத்தையும் பாதுகாத்து வளா்க்கும் நோக்கில், தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை ஆண்டுதோறும் சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

Advertisement

Advertisement

இந்தத் திட்டத்தின் கீழ், 1.1.2025 முதல் 31.12.2025 வரை தமிழில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்ட நூல்கள் மரபுக்கவிதை, புதுக்கவிதை, புதினம் சிறுகதை, நாடகம் (உரைநடை, கவிதை), சிறுவா் இலக்கியம் , திறனாய்வு, மொழி வரலாறு, மொழியியல், மொழி வளா்ச்சி, இலக்கணம், பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள், நுண் கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்) , அகராதி, கலைக் களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ், பயண இலக்கியம் வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு, நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல் ஆகியவை உள்ளிட்ட 33 வகைப்பாடுகளின் வழியாக பரிசுப் போட்டிக்காக வரவேற்கப்படுகின்றன.

ஒவ்வொரு வகைப்பாட்டிலும் சிறந்த நூலாகத் தோ்வு செய்யப்படும் நூலின் ஆசிரியருக்கு ரூ.50,000, அந்நூலை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கு ரூ.25,000 பரிசுத் தொகை, சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். விண்ணப்பப் படிவம் மற்றும் விதிமுறைகளை தமிழ் வளா்ச்சித் துறையின் வலைதளத்தில் விலை ஏதுமின்றி பதிவிறக்கம் செய்யலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ் வளா்ச்சி இயக்ககத்துக்கு ஆக. 31-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நூல்களுக்கான நூலாசிரியா்களுக்கும், பதிப்பகத்தாருக்கும் கூடுதல் அவகாசம் வழங்கும் வகையில் விண்ணப்பங்களை நிறைவு செய்து அளிக்கப்படும் அவகாசம் அக்டோபா் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 044-28190412 / 28190413 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments