FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

கேளீர் தமிழ் வரலாறு: தெள்ளுற்ற தமிழமுது...

'கேளீர் தமிழ் வரலாறு - கேட்கக் கேட்க அது நமக்கு முக்கனிச் சாறு' என்று பாடினார் பாரதியின் தாசன்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 7:36 pm IST
பகிர்:

'கேளீர் தமிழ் வரலாறு - கேட்கக் கேட்க அது நமக்கு முக்கனிச் சாறு' என்று பாடினார் பாரதியின் தாசன். தமிழின் வரலாறு கற்பனைக்கும் எட்டாத தொன்மை கொண்டது; வளமும் தொடர்ச்சியும் வாய்ந்தது. என்றென்றும் வாழும் உயிர்ப்புடையது. 'என்றுமுள தென்றமிழ்' எனக் கம்பர் அதனை மதிப்பிட்டு மாண்புரைத்தார். மகாகவி பாரதியும் 'புகழ் ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்' எனத் தமிழ்த்தாயின் கூற்றுக்குள் தனது எண்ணத்தைப் பொதிந்துவைத்தார்.

தமிழ் என்னும் நம் தாய்மொழியின் திருப்பெயர் தன் பல்வகைச் சிறப்புகளை உணர்த்தும் வகையில் செந்தமிழ், பைந்தமிழ், தண்டமிழ், அருந்தமிழ், நறுந்தமிழ், தீந்தமிழ், வண்டமிழ், ஒண்டமிழ், நற்றமிழ், இன்றமிழ், இருந்தமிழ், கன்னித்தமிழ், மூவாத்தமிழ் எனவெல்லாம் காலந்தோறும் போற்றப்பெற்று வருகின்றது.

தமிழ்நூல்களுள் கிடைத்துள்ளவற்றுள் முதல்நூலாகிய தொல்காப்பியம், 'தமிழ் என் கிளவி' என்பதோடு, தமிழைப் போற்றும் இச்சொல்லாட்சிகளுள் 'செந்தமிழ்' எனும் ஆட்சியை ஒருமுறைக்கு இருமுறை ஆண்டு 'செந்தமிழ் நிலம்', 'செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம்' என ஆண்டுள்ள பெற்றி நாம் உணர்ந்து மகிழ்தற்குரியது.

Advertisement

Advertisement

பாரதியாரும் தமிழ்நிலத்தைக் குறிக்க வருகையில் தொல்காப்பிய நெறியை அடியொற்றுவதுபோலச் 'செந்தமிழ் நாடெனும் போதினிலே' எனப் பாடிப் போற்றியிருக்கின்றார். சங்கப் பாக்களிலோ 'தண்டமிழ்' எனும் ஆட்சி சிறப்புப்

பெறுகிறது. சிலப்பதிகாரத்தின் நூற்கட்டுரை 'செந்தமிழ், 'கொடுந்தமிழ்' (வழக்குத் தமிழ்) இரண்டையும் சுட்டிநிற்கின்றது.

தமிழ்மொழி இயல்பும் இனிமையும் கொண்ட உயர்மொழி. இதனைப் பிங்கல நிகண்டு 'இனிமையும் நீர்மையும் தமிழ்என லாகும்' அழகுற எடுத்துரைத்துள்ளது. கம்பர் காலத்திலேயே தமிழ் அளக்கமுடியாத கடலாகப் பரந்துவிரிந்து திகழ்ந்திருக்கின்றது. 'தமிழ் எனும் அளப்பரும் சலதி' என்பது கம்பநாடர் வாக்கு.

தண்டியலங்கார உரையில் இடம்பெற்ற வெண்பாவொன்று தமிழின் உச்ச இடத்தை 'உலகின் இருளை அகற்ற வல்லவை இரண்டு; ஒன்று ஞாயிறு, மற்றது தன்னேர் இலாத தமிழ்' என மொழிந்து உலகினராகிய நம் அக இருளை அகற்றவல்லது தமிழ் என்பதனை முரசறைந்தது.

இப்படித் தமிழை எல்லோரும் பாராட்டிக் கொண்டேயிருந்தால் எப்படி? தமிழை இகழவும் தலைப்பட்டார் பதினெட்டாம் நூற்றாண்டில் 'இலக்கணக் கொத்து' நூலின் ஆசிரியர் சுவாமிநாத தேசிகர். 'ஐந்தெழுத்தால் ஒரு பாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே' எனக் குறையொன்றுமில்லாத் தாய்மொழியைக் குறைசொல்லி வரலாற்றில் தீராப் பழிசுமந்தார்.

தமிழிலக்கண நூலொன்றின் ஆசிரியரே தமிழின் சீர்த்தி உணராத நிலைகண்டு வெகுண்டார். அதற்கடுத்த நூற்றாண்டில் தோன்றிய 'அறுவகை இலக்கண' நூலின் ஆசிரியர் தண்டபாணி சுவாமிகள்.

தமிழ்மொழிக்கு உயர்மொழி தரணியில் உளதுஎனில்

வெகுளியற்று இருப்போன் வெறும்புலவோனே

எனச் சண்டமாருதமாய்ப் பதிலடி தந்தார்.

இந்த மரபில்தான் சுந்தரனார் மனோன்மணீய நாடகத்தில் 'தமிழ்த் தெய்வ வணக்கம்' பாடினார். அதன் ஒரு பகுதியே இன்று தமிழ்த்தாய் வாழ்த்தாகத் திகழ்கிறது.

தமிழிலக்கியங்களின் பாடுபொருள்கள் பற்பல. தமிழையே பாடுபொருளாகக் கொண்ட இலக்கியங்களும் தமிழில் தோன்றியுள்ளன. தமிழ்விடு தூது, தமிழலங்காரம், தமிழியக்கம், தமிழ்த்தாய் பிள்ளைத் தமிழ் முதலியன இவ்வகையின.

தமிழுக்கென முதன்முதலில் உலக அளவில் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தை உருவாக்கிய தனிநாயக அடிகள், 'உலக மொழிகளிலேயே முதன்மையான சமயங்கள் அனைத்திற்கும் காப்பியங்களைக்கொண்ட பெருமைமிக்க ஒரேமொழி தமிழ்தான்' எனத் தமிழின் தனித்த இடத்தை எடுத்துக்காட்டினார்.

மேலும் 'ஆங்கிலம் - வணிகத்தின் மொழி, இலத்தீன் - சட்டத்தின் மொழி, கிரேக்கம் - இசையின் மொழி, ஜெர்மன் - தத்துவத்தின் மொழி, பிரெஞ்சு - தூதின் மொழி, இத்தாலியம் - காதலின் மொழி என்பதுபோலத் தமிழ் இரக்கத்தின் மொழி எனக் கூறுவது இனிது பொருந்தும். பக்தியின் மொழி என்றும் கூறலாம்' என நமக்கும் ஞாலத்திற்கும் உணர்த்தினார்.

பாரதிதாசன் 'கழைக்கூத்தாடி' என ஒரு கவிதை படைத்துள்ளார். அதில் ஓர் எலும்புக்கூட்டுக்கு உயிரும் உடம்பும் தோன்றும் இரசவாதம் நிகழ்கிறது. அக்கூத்தாடி ஒரு மருந்தைச் செய்து எலும்புக்கூட்டில் தடவுகிறான். அந்த மருந்தை அவன் மாம்பழம், ரஸ்தாளி, பலாச்சுளை, தேன், பால், இளநீர், இடித்த தினைமாவு, பொடித்த பருப்பு ஆகியவற்றால் பக்குவம் செய்து உருவாக்குகிறான். எலும்புக்கூடு உயிர்பெற்று எழுகிறது. அந்த எலும்புக்கூடுதான் தமிழ்நாடு. செய்து தடவிய மருந்து - தமிழ். இராமலிங்கரின் 'தனித்தனி முக்கனி பிழிந்து' எனு பாடலின் பரிணாமமே பாரதிதாசன் பாடல். தமிழ் இல்லையென்றால் தமிழ்நாடு வெறும் எலும்புக்கூடுதானே?

சில ஆண்டுகளுக்கு முன்னர் டேவிட் சுல்மன் எனும் இசுரேலில் வசிக்கும் அமெரிக்கத் தமிழ் அறிஞர் 'தமிழின் வாழ்க்கை வரலாறு' எனும் பொருள்படும் தலைப்பில் (தமிழ்- ஏ பயோகிரபி) நூலொன்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார். தமிழ் இப்படி உலக அரங்கில் தொடர்ந்து கவனத்தைப் பெற்றுவருகின்றது.

மகாகவி பாரதி தமிழைத் 'தெள்ளுற்ற தமிழமுது' என்று பாடினார். பாரதிதாசன் 'தமிழுக்கு அமுதென்று பேர்' எனப் பாடினார். தமிழைக் குறித்த இருவர் சிந்தனையும் ஒன்றிச் செல்வதனைப் பாருங்கள்.

நம் காலத்தின் மூத்த கவிஞர் சிற்பி, தமிழ்த்தாய் நம்மை நோக்கிப் பேசுவதுபோல ஒரு கவிதை படைத்துள்ளார். 'என்னைத் தெரிகிறதா? இளையமுகம் தெரிகிறதா? அன்புக்குக் காத்திருக்கும் அடியவளைத் தெரிகிறதா?' என அக்கவிதையில் தமிழின் குரல் ஒலிக்கும். அந்தக் குரல் எப்போதும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. தமிழ்நாட்டு மக்கள்தான் அன்பு வைக்கவேண்டும்.

பாரதி சொன்ன 'தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகாண' இத்தகைய தமிழ் வரலாற்றின் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட பக்கங்களை இனி மெல்லப் புரட்டிப் பார்ப்போம்!

தொடரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments