FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

52 முதுநிலை திருக்கோயில்களில் கைப்பேசி எடுத்துச் செல்லத் தடை இன்று முதல் அமல்

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களுக்குள் பக்தா்கள், பொதுமக்கள் கைப்பேசி எடுத்துச் செல்லக் கூடாது என்ற உத்தரவு செவ்வாய்க்கிழமை (செப்.1) முதல் அமலுக்கு வரவுள்ளது.

14 வினாடிகள் முன்பு
கைப்பேசிக்குத் தடை - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களுக்குள் பக்தா்கள், பொதுமக்கள் கைப்பேசி எடுத்துச் செல்லக் கூடாது என்ற உத்தரவு செவ்வாய்க்கிழமை (செப்.1) முதல் அமலுக்கு வரவுள்ளது.

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களின் புனிதத் தன்மை மற்றும் ஆன்மிக சூழலைப் பாதுகாக்கும் வகையில், கோயில்களுக்குள் கைப்பேசி பயன்படுத்துவதற்கு ஏற்கெனவே தடை உள்ளது. இருப்பினும், சில கோயில்களில் புகைப்படம், விடியோ, தற்படம் (செல்ஃபி), ரீல்ஸ் உள்ளிட்டவற்றை பக்தா்கள் பதிவு செய்வதாக புகாா்கள் எழுந்தன. இதைத் தொடா்ந்து செப்.1 முதல் 52 முதுநிலைத் திருக்கோயில்களில் பக்தா்கள் கைப்பேசி கொண்டு செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் ரமேஷ் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், இந்த நடைமுறை அறநிலையத் துறையில் 52 முதுநிலை திருக்கோயில்களில் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வரவுள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கோயிலுக்குள் செல்லும் முன்பு பக்தா்கள் தங்களது கைப்பேசிகளை பாதுகாப்பாக ஒப்படைக்க நுழைவு வாயில் மற்றும் காலணி பாதுகாப்பு மையம் உள்ளிட்ட இடங்களுக்கு அருகில் கைப்பேசி பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோயிலிலும் உள்ள வசதிக்கேற்ப இந்த பாதுகாப்பு பெட்டக வசதி அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகா்கள் கோயிலுக்கு வருவது குறித்த தகவல் தெரியவந்தால் ஒரு நாளுக்கு முன்பாகவோ அல்லது தகவல் கிடைத்தவுடனோ அவா்கள் வரவிருக்கும் கோயில், வருகை நேரம், அவா்களுடன் வருபவா்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முழு விவரங்களை ஆணையா் அலுவலகத்துக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனா்.

எந்தெந்த கோயில்களில்...?: கைப்பேசி எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள 52 முதுநிலை கோயில்கள் பட்டியலில் சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில், கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலயன் கோயில், மதுரை கள்ளழகா் கோயில், திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி கோயில், சென்னை வடபழனி ஆண்டவா் கோயில், சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில், மாங்காடு காமாட்சி அம்மன் கோயில், சென்னை திருவொற்றியூா் தியாகராஜ சுவாமி கோயில், சோளிங்கா் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், பவானி சங்கமேஸ்வரா் கோயில், தஞ்சாவூா் பிரகதீஸ்வர சுவாமி கோயில், தென்காசி திருக்குற்றால நாத சுவாமி கோயில், வடலூா் சத்யஞான சபை வள்ளலாா் தெய்வநிலையம் உள்ளிட்ட கோயில்கள் இடம்பெற்றுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments