முதல்வர் விஜய், பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்த முக்கிய அறிவிப்புகள்!
முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று (ஆக 31) சட்டப் பேரவையில், விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் குறித்து...
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று (ஆக 31) சட்டப் பேரவையில், விதி எண் 110-ன் கீழ் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பால் கொள்முதல் விலை மேலும் உயர்வு, தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், மின் பகிர்மானக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செமிகண்டெக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா, கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம் உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் புதன்கிழமை பேசியதாவது:
தமிழ்நாட்டின் வளர்ந்துவரும் பொருளாதாரம் மற்றும் அதிகரித்துவரும் மின் நுகர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு மற்றும் மின் விநியோகத் துறைகளில் விரிவான மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த மின்கட்டமைப்பு அவசியமாகிறது.
Advertisement
Advertisement
தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்
மின் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சென்னை போன்ற முக்கிய மின் நுகர்வு மையங்களுக்குத் திறம்படக் கொண்டு செல்வதற்கான மின் தொடரமைப்பை மேம்படுத்துவது அவசியமாகிறது. இதற்காக, அரசு தொலைநோக்குடன் ரூ.33 ஆயிரத்து 66 கோடி மதிப்பீட்டில் “தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்” செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 196 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுடைய புதிய மின் பாதைகள் அமைக்கப்படுவதுடன், ஏற்கனவே உள்ள மின் பாதைகள் வலுப்படுத்தப்படும்.
தூத்துக்குடியில் புதிய அனல் மின் நிலையம் அமைத்தல்
தமிழ்நாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து, காற்றாலை, சூரிய மின்சாரம் மற்றும் மின்கல சேமிப்பு போன்ற துறைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது என்றாலும், இந்த ஆற்றல் ஆதாரங்கள் சமச்சீராகக் கிடைப்பதில்லை. தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இருந்து பெறப்படும் உபரி மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்துவைத்து இரவு நேரங்களில் தேவைக்கேற்ப பயன்படுத்தும் தொழில்நுட்பம் தற்போது நிறுவப்பட்டு வருகின்றபோதிலும், தற்போதுள்ள கட்டமைப்பு அனைத்து நேரங்களிலும் உள்ள மின்தேவையைப் பூர்த்திசெய்ய இயலாது. எனவே, மின்தேவை அதிகமாக இருக்கும் காலங்களில் தடையற்ற மின்சாரத்தை வழங்க அனல்மின் உற்பத்தியையே பெரிதும் நம்பியிருக்க வேண்டியுள்ளது. ஆகவே, இதற்கான கட்டமைப்பை மேம்படுத்துவது மிகவும் அவசியமானது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் புதிய அனல் மற்றும் நீர்மின் நிலையங்கள் அமைப்பதற்குப் பெரிய அளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவில்லை. தொடர்ந்து அதிகரித்துவரும் மின் சுமையைத் திறம்பட கையாள்வதற்கும், மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், மின் உற்பத்தித் துறையில் முதலீடுகளை மேற்கொள்வது இன்றியமையாதது ஆகும். தூத்துக்குடி அனல் மின் நிலையம் தமிழ்நாட்டின் முக்கிய அனல் மின் நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையத்தில் தற்போது தலா 210 மெகாவாட் திறன்கொண்ட ஐந்து நிலக்கரி அடிப்படையிலான உற்பத்தி அலகுகள் உள்ளன. இவற்றின் மொத்த நிறுவு திறன் ஆயிரத்து 50 மெகாவாட் ஆகும். இந்த அலகுகள் 1979-ஆம் ஆண்டு முதல் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களுக்குப் பொருந்தக்கூடிய சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு இணங்க, தற்போதுள்ள அலகுகளைப் படிப்படியாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள ஐந்து, 210 மெகாவாட் அலகுகளைப் படிப்படியாக மாற்றியமைத்து, தூத்துக்குடி அனல் மின் நிலைய வளாகத்தில், பொது மற்றும் தனியார் கூட்டாண்மை முறையில், தலா 800 மெகாவாட் திறன்கொண்ட இரண்டு அலகுகளுடன், மொத்தமாக ஆயிரத்து 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு புதிய அனல் மின் நிலையம் ரூ.20 ஆயிரத்து 800 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
மின் பகிர்மானக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள்
சென்னை மாநகரின் மின்தேவையைப் பூர்த்தி செய்ய வலுவான மின் பகிர்மானக் கட்டமைப்பு அவசியமாகும். சென்னையில் பருவ மழைக்காலங்களில் வெள்ளம் தொடர்பாக ஏற்படும் மின்தடைகளையும், கோடைக்காலங்களில் அதிக மின் தேவை காரணமாக ஏற்படும் சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, 36 புதிய 33/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் அமைத்தல், புதிய மின் பகிர்மான மின்மாற்றிகளை நிறுவுதல், சேதமடைந்த மற்றும் பயன்பாட்டுக் காலம் நிறைவடைந்த கேபிள்கள், மின்கடத்திகள், பில்லர் பாக்ஸ், மின்சுற்றுத் துண்டிப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களை மாற்றுதல் போன்ற பணிகள் ரூ. 1, 62 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
பால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு
பால் உற்பத்தி, கிராமப் பொருளாதார மேம்பாட்டில் ஒரு முக்கியப் பங்கு வதிப்பதனையும் கருத்தில் கொண்டு கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3 இலட்சத்து 16 ஆயிரத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு கூட்டுறவு சங்கம் மூலமாக 1 ரூபாய் உயர்த்தவும், மேலும், அரசு ஊக்கத்தொகை 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்த்தவும் முடிவு செய்து ஆக மொத்தம் ஒரு லிட்டர் கொள்முதல் விலை ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தி ஆக.19-ல் பேரவையில் அறிவித்தோம்.
இந்தச் சூழ்நிலையில், கறவை மாடுகளுக்கான பசுந்தீவனம், உலர் தீவனம், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றின் விலை மற்றும் இதர இடுபொருட்களின் விலை ஆகியவை மிகவும் உயர்ந்துள்ளதைத் தெரிவித்து, பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தித்தர வேண்டும் என்று பல்வேறு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்குக் கோரிக்கையை வைத்துள்ளனர்.
எனவே, பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையினைக் கனிவுடன் பரிசீலனை செய்து நமது அரசு, பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு மேலும் ரூ. 3 உயர்த்தி ரூ.44 வழங்கவும் தற்போது அரசு முடிவு செய்துள்ளது.
நமது அரசு, பால் உற்பத்தியாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு இந்த முடிவினை எடுத்துள்ளது. மேலும், பால் கொள்முதல் விலை உயர்வினால் ஏற்படும் செலவினத்தை ஆவின் நிறுவனத்திற்கு அரசு ஈடு செய்து வழங்கும்.
இந்த கொள்முதல் விலை உயர்வால் கூடுதலாக மொத்தம் ஒரு மாதத்திற்கு ரூ. 60 கோடியும், ஒரு ஆண்டிற்கு ரூ.720 கோடியும் செலவாகும்.
காஞ்சிபுரத்தில் செமிகண்டெக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா
தமிழ்நாட்டில் செமிகண்டெக்டர் துறையில் அதிக அளவு முதலீட்டினை ஈர்க்கவும், இத்துறையில் நமது மாநிலத்தின் பங்கினை கணிசமான அளவு உயர்த்திடவும், காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில் செமிகண்டெக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா, ரூ.175 கோடி மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்படும்.
இந்த பூங்காவில், செமிகண்டெக்டர் துறையில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கு ஏதுவாக உலகத்தரம் வாய்ந்த, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு வசதிகள் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் இந்த துறையில் சுமார் ரூ. இரண்டாயிரம் கோடி வரை முதலீடுகள் ஈர்க்கப்படும். மேலும், சுமார் 5,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம்
நிதித் தொழில்நுட்ப புதுமைகளுடன் டிஜிட்டல் நிதிச் சேவைகளை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மூலம் கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.400 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
உலகத் தரத்திலான வசதிகள், அலுவலக இடங்கள், புத்தொழில் நிறுவனங்கள், நவீன ஆய்வகங்கள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு போன்ற அதிநவீன வசதிகள் இம்மையத்தில் இடம்பெறும். இதன்மூலம், கோயம்புத்தூர் மாவட்டத்தில், நிதி மற்றும் நிதிநுட்பத் துறையில் உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கவும், நவீன தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கவும், உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படும்.
திருச்சி மண்டலத்தில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையம்
2026-27-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்கள், உலர் துறைமுகங்கள் அமைத்து முதலீட்டை ஈர்க்க அரசு முயற்சிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள மாவட்டப் பகுதிகளில் முக்கிய உற்பத்தித் தொழிற்சாலைகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளதால், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மூலம் ஆய்வு மேற்கொண்டு, திட்ட அறிக்கை தயார்செய்து அதன் அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் “பல்முனை சரக்கு போக்குவரத்து மையம்” ஒன்று அமைக்கப்படும் என கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.