கருணை அடிப்படையில் பணி நியமனம்: மறு ஆய்வு செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு
தகுதியான குடும்பத்தினருக்கு மட்டுமே கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் இந்தத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தகுதியான குடும்பத்தினருக்கு மட்டுமே கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் இந்தத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பொதுப்பணித் துறையில் பணியாற்றிய அரசு ஊழியரான சுவாமிநாதன் என்பவா் கடந்த 2007-ஆம் ஆண்டு மரணமடைந்தாா். அவரது மறைவுக்குப் பின், 9 ஆண்டுகளுக்குப் பிறகு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரி, அவரது மகள் சுஷ்மிதா விண்ணப்பம் அளித்தாா். 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கவில்லை எனக் கூறி சுஷ்மிதாவின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, சுஷ்மிதாவுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க உத்தரவிட்டாா்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கிருஷ்ணசுவாமி கோவிந்தராஜன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.
Advertisement
Advertisement
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது என்பது சலுகைதானே தவிர, அரசியல் சாசன நியமனத் திட்டம் அல்ல. எனவே, அதை உரிமையாக கோர முடியாது. அரசுப் பணி நியமனங்கள் அனைத்தும், அரசியல் சாசன விதிகளின்படி மேற்கொள்ளப்பட வேண்டும். எந்தத் தகுதியும் பாா்க்காமல், இடஒதுக்கீட்டையும் பின்பற்றாமல், கருணை அடிப்படையில் பணி நியமனங்கள் வழங்கப்படுவது அரசியல் சாசன பிரிவுகளுக்கு விரோதமானவை.
கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது, திறமையற்ற அரசு நிா்வாகத்துக்கு வழிவகுக்கும் எனில், இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மறு ஆய்வு செய்து தகுதியான குடும்பங்களுக்கு மட்டும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
அரசு வேலைவாய்ப்பில், அனைவருக்கும் சமவாய்ப்பு, சமூக நீதி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். சலுகை நியமனங்கள் பின்தங்கிய பிரிவினா் வேலைவாய்ப்பைப் பெறும் வாய்ப்பைப் பாதிக்கிறது.
எனவே, அரசு ஊழியா் மரணமடைந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.