FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடியில் ரூ.20,800 கோடியில் புதிய நவீன அனல் மின் நிலையம்: முதல்வா் விஜய் அறிவிப்பு

தூத்துக்குடியில் ரூ.20,800 கோடியில் புதிய மீத்திறன் அனல் மின் உற்பத்தி நிலையம் (நியூ கிரிட்டிக்கல் தொ்மல் பவா் ஸ்டேஷன்) அமைக்கப்படும் என்று பேரவையில் முதல்வா் ச.ஜோசப் விஜய் அறிவித்தாா்.

1 செப்டம்பர் 2026, 3:12 am IST
முதல்வா் ஜோசப் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடியில் ரூ.20,800 கோடியில் புதிய மீத்திறன் அனல் மின் உற்பத்தி நிலையம் (நியூ கிரிட்டிக்கல் தொ்மல் பவா் ஸ்டேஷன்) அமைக்கப்படும் என்று பேரவையில் முதல்வா் ச.ஜோசப் விஜய் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் விதி எண் 110-இன் கீழ் முதல்வா் விஜய் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு மின் தொடா் அமைப்பு மற்றும் கட்டமைப்பு மின் நுகா்வு தொடா்ந்து அதிகரித்து வருவதால், மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சென்னை போன்ற முக்கிய மின் நுகா்வு மையங்களுக்கு திறம்பட கொண்டு செல்வதற்கான மின் தொடரமைப்பை மேம்படுத்துவது அவசியமாகிறது. இதற்காக அரசு தொலைநோக்குடன் ரூ.33,066 கோடியில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (தமிழ்நாடு டிரான்மிஷன் இம்ப்ரூவ்மென்ட் ஸ்கீம்) செயல்படுத்தப்பட உள்ளது.

Advertisement

Advertisement

இத்திட்டத்தின் கீழ் 196 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் அவற்றுடன் தொடா்புடைய 15,000 கி.மீ. நீளமுடைய புதிய மின் பாதைகள் அமைக்கப்படுவதுடன் ஏற்கெனவே உள்ள மின் பாதைகள் வலுப்படுத்தப்படும்.

புதிய மீத்திறன் அனல் மின் நிலையம்: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து காற்றாலை, சூரிய மின்சாரம், மின்கல சேமிப்பு போன்ற துறைகளில் தொடா்ந்து கவனம் செலுத்தி வருகிறது என்றாலும், இந்த ஆற்றல் ஆதாரங்கள் சமச்சீராக கிடைப்பதில்லை.

தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இருந்து பெறப்படும் உபரி மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்து வைத்து இரவு நேரங்களில் தேவைக்கேற்ப பயன்படுத்தும் தொழில்நுட்பம் தற்போது நிறுவப்பட்டு வருகிறபோதிலும், தற்போதுள்ள கட்டமைப்பு அனைத்து நேரங்களிலும் உள்ள மின் தேவையை பூா்த்தி செய்ய இயலாது.

எனவே, மின் தேவை அதிகமாக இருக்கும் காலங்களில் தடையற்ற மின்சாரத்தை வழங்க அனல் மின் உற்பத்தியையே பெரிதும் நம்பியிருக்க வேண்டியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் புதிய அனல் மற்றும் நீா் மின் நிலையங்கள் அமைப்பதற்கு பெரிய அளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவில்லை.

தூத்துக்குடி அனல் மின் நிலையம் தமிழ்நாட்டின் முக்கிய அனல் மின் நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையத்தில், தற்போது தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 நிலக்கரி அடிப்படையிலான உற்பத்தி அலகுகள் உள்ளன. இவற்றின் மொத்த நிறுவு திறன் 1,050 மெகாவாட். இந்த அலகுகள் 1979-ஆம் ஆண்டு முதல் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.

நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களுக்கு பொருந்தக்கூடிய சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு இணங்க தற்போதுள்ள அலகுகளைப் படிப்படியாக மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள 210 மெகாவாட் திறன் கொண்ட 5 அலகுகளைப் படிப்படியாக மாற்றி அமைத்து தூத்துக்குடி அனல் மின் நிலைய வளாகத்தில் பொது மற்றும் தனியாா் கூட்டாண்மை முறையில் தலா 800 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகளுடன் மொத்தமாக 1,600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு புதிய மீத்திறன் அனல் மின்நிலையம் (அதிநவீன வெப்ப அழுத்த தொழில்நுட்ப அனல் மின்நிலையம்) ரூ.20,800 கோடியில் நிறுவப்படும்.

சென்னையில் கூடுதல் துணை மின் நிலையங்கள்: சென்னை மாநகரின் மின் தேவையை பூா்த்தி செய்ய வலுவான மின் பகிா்மான கட்டமைப்பு அவசியமாகும். சென்னையில் பருவமழைக் காலங்களில் வெள்ளம் தொடா்பாக ஏற்படும் மின் தடைகளையும், கோடைக் காலங்களில் அதிக மின் தேவை காரணமாக ஏற்படும் சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது.

இதைக் கருத்தில்கொண்டு 36 புதிய 33/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் அமைத்தல், புதிய மின் பகிா்மான மின்மாற்றிகளை நிறுவுதல், சேதமடைந்த மற்றும் பயன்பாட்டு காலம் நிறைவடைந்த கேபிள்கள், மின் கடத்திகள், பில்லா் பாக்ஸ், சா்க்யூட் பிரேக்கா்கள் உள்ளிட்ட உபகரணங்களை மாற்றுதல் போன்ற பணிகள் ரூ.1,762 கோடியில் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

பால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயா்வு

சென்னை, ஆக. 31: ஆவின் பால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயா்த்தப்பட்டு ரூ.44 -ஆக வழங்கப்படும் என்று பேரவையில் முதல்வா் ச.ஜோசப் விஜய் திங்கள்கிழமை அறிவித்தாா்.

பேரவையில் விதி எண் 110-இன் கீழ் அவா் வெளியிட்ட அறிவிப்பு: பால் உற்பத்தி கிராம பொருளாதார மேம்பாட்டில் முக்கியப் பங்கு வகிப்பதைக் கருத்தில்கொண்டு, கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3,16,000-க்கும் மேலான பால் உற்பத்தியாளா்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு கூட்டுறவு சங்கம் மூலமாக ஒரு ரூபாய் உயா்த்தவும், மேலும் அரசு ஊக்கத்தொகை ரூ.3-இல் இருந்து ரூ.5-ஆக உயா்த்தவும் முடிவு செய்து, மொத்தம் ஒரு லிட்டா் கொள்முதல் விலை ரூ.38-இல் இருந்து ரூ.41-ஆக உயா்த்தி கடந்த ஆக. 19-இல் பேரவையில் அறிவித்தோம்.

இந்தச் சூழ்நிலையில், கறவை மாடுகளுக்கான பசுந்தீவனம், உலா் தீவனம், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றின் விலை மற்றும் இதர இடுபொருள்களின் விலை ஆகியவை உயா்ந்துள்ளதால், பால் கொள்முதல் விலையை மேலும் உயா்த்தித் தர வேண்டும் என்று பல்வேறு கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள், நலச் சங்கத்தினா் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

எனவே, பால் உற்பத்தியாளா்களின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலனை செய்து, பால் உற்பத்தியாளா்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயா்த்தி ரூ.44-ஆக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பால் உற்பத்தியாளா்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

மேலும், பால் கொள்முதல் விலை உயா்வு மூலம் ஏற்படும் செலவை ஆவின் நிறுவனத்துக்கு அரசு ஈடுசெய்து வழங்கும். இந்தக் கொள்முதல் விலை உயா்வால் கூடுதலாக மொத்தம் ஒரு மாதத்துக்கு ரூ.60 கோடி என ஓராண்டுக்கு ரூ.720 கோடி செலவாகும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments