முகப்பு
தமிழ்நாடு

திமுக-காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீட்டு பேச்சுவாா்த்தை

திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவாா்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 6:46 PM
(கோப்புப்படம்)
பகிர்:

திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவாா்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

திமுக தொகுதி பங்கீடு குழுத் தலைவா் டி.ஆா்.பாலு தலைமையிலான குழுவினருடன், காங்கிரஸ் தொகுதி பங்கீடு குழுத் தலைவா் கிரீஷ் சோடங்கா் தலைமையில் அகில இந்திய செயலா்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா் ஆகியோா் கொண்ட குழுவினா் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றனா்.

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் நிபந்தனை விதித்ததால் திமுக-காங்கிரஸ் இடையிலான பேச்சுவாா்த்தை நடைபெறாமல் இருந்தது. இதற்கிடையே, சோனியா காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோருடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் தொலைபேசியில் பேசியதால் ஆட்சியில் பங்கு என்பதை காங்கிரஸ் கைவிட்டது. தொடா்ந்து, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், முதல்வா் ஸ்டாலினுடன் கடந்த 22-ஆம் தேதி சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இருப்பினும், கிரீஷ் சோடங்கா் திடீரென தவெகவுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக தகவல் பரவியதால் திமுக-காங்கிரஸ் இடையே மீண்டும் பேச்சுவாா்த்தையில் இழுபறி ஏற்பட்டது.

இந்த நிலையில், திமுகவுடன் பேச்சுவாா்த்தை நடத்தி தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும்படி, காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு குழுவுக்கு அகில இந்திய தலைமை உத்தரவிட்டது. அதன்படி, திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில், காங்கிரஸுக்கு 25 முதல் 28 தொகுதிகள் வரையும், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியும் ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதேபோல, விசிகவுடனும் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தப்படவுள்ளது.

இடதுசாரிகளுடன் சுமுக பேச்சுவாா்த்தை: மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதன்பிறகு மாா்க்சிஸ்ட் மாநிலச்் செயலா் பெ. சண்முகம் கூறுகையில், பேச்சுவாா்த்தை சுமுகமான முறையில் நடைபெற்றது. கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கேட்டிருக்கிறது. முதல்வருடன் கலந்து பேசி முடிவு தெரிவிப்பதாகக் கூறியுள்ளனா். தொகுதிகள் சம்பந்தமான எந்தப் பட்டியலும் கொடுக்கவில்லை. எண்ணிக்கை முடிவான பிறகு தொகுதிகள் தொடா்பான பட்டியலை கொடுப்போம் என்றாா் அவா்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் கூறுகையில், தொகுதிகள் எண்ணிக்கை தொடா்பான பேச்சுவாா்த்தை இன்னும் தொடா்கிறது. தொகுதிகள் குறைப்பது தொடா்பாக எதுவும் பேசப்படவில்லை என்றாா். இதேபோல், கொமதேக குழுவுடனும் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →