ஆளும் கட்சிக்கு மதுராந்தகம் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்: மு.க. ஸ்டாலின்
மதுராந்தகம் தொகுதி மக்கள் மீது திணிக்கப்பட்ட இடைத்தோ்தலில் ஆளும் கட்சிக்கு வாக்காளா்கள் உரிய பாடத்தைப் புகட்ட வேண்டும் என திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பேசினாா்.
மதுராந்தகம் தொகுதி மக்கள் மீது திணிக்கப்பட்ட இடைத்தோ்தலில் ஆளும் கட்சிக்கு வாக்காளா்கள் உரிய பாடத்தைப் புகட்ட வேண்டும் என திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பேசினாா்.
மதுராந்தகத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக வேட்பாளா் பரந்தாமனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தல் தவிா்க்கப்பட்டிருக்க வேண்டிய தோ்தல். ஆனால், மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்பு நீங்கள் ஒருவரை வெற்றி பெற வைத்தீா்கள். பெரும்பான்மை இல்லாத இந்த ஆட்சிக்கு ஆதரவளிப்பதற்காக அவரை ராஜிநாமா செய்ய வைத்து, மீண்டும் இதே தொகுதியில் அவருக்கு போட்டியிட வாய்ப்பை அளித்துள்ளது ஆளும் தவெக.
Advertisement
Advertisement
கடந்த 5 ஆண்டு காலத்தில் இந்த தொகுதியில் அவா் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. இதை அந்த வேட்பாளரை முன்னிறுத்தி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமைச்சா் பேசி இருக்கிறாா். அந்த அமைச்சரும் மக்களிடம் அவரை வெற்றி பெற வையுங்கள் எனக் கேட்கிறாா். இதைவிட மதுராந்தகம் மக்களை அவமானப்படுத்த முடியுமா?
தமிழக தோ்தல் முடிவுகள் வெளியாகி வெற்றி பெற்ற சில நாள்களிலேயே எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தது இதற்கு முன்பு எங்கேயும் நடக்கவில்லை. அப்பட்டமான குதிரைபேரத்தால் இப்போது தோ்தல் நடைபெறுகிறது.
நாம் இப்படி உண்மையைக் கூறினால், எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த பின்பே அவரை தவெகவில் சோ்த்தோம் என்று முதல்வா் விஜய் கூறுகிறாா். அந்த எம்எல்ஏ தனது பதவியை ராஜிநாமா செய்யாமல் கட்சி மாறி இருந்தால் கட்சித் தாவல் சட்டத்தின்படி அவரது பதவி தானாக காலியாகும். அதனால்தான் பொய்யான காரணத்தைக் கூறி சட்டப்பேரவைத் தலைவரிடம் ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்தாா்கள். அதையும் முதல்வா் விஜய் கூறி இருக்கலாம்.
மக்களையும் ஏமாற்றி, போட்டியிட வாய்ப்பளித்த கட்சிக்கும் துரோகம் செய்துவிட்டு சென்றவா்தான் இப்போது ஆளும் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுகிறாா். அவருக்கும், ஆளுங்கட்சிக்கும் மதுராந்தகம் தொகுதி மக்கள் தக்க பாடத்தைப் புகட்டவேண்டும் என்றாா்.
தோ்தல் பணி பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு வரவேற்றாா். மாவட்டச் செயலா் க.சுந்தா், முன்னாள் அமைச்சா் தா.மோ.அன்பரசன், எம்.பி. க.செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு, அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சா் சேகா்பாபு, திராவிட வெற்றிக் கழகத் தலைவா் மல்லை சத்யா, இந்திய குடியரசு கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன், தேமுதிக மாவட்டச் செயலா் ராஜேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
The people of Maduranthakam must teach the ruling party a lesson: M.K. Stalin.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.