FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மதுராந்தகம் உள்பட 6 தொகுதிகளில் இடைத்தோ்தலுக்கு தடை கோரி மனு

மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் இடைத்தோ்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

16 செப்டம்பர் 2026, 5:16 am IST
சென்னை உயர்நீதிமன்றம் - ANI
பகிர்:

மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் இடைத்தோ்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மக்கள் விரோத ராஜிநாமாக்களைத் தடுக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் காசி ராமலிங்கம் என்பவா் தாக்கல் செய்த மனுவில், சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), எஸ்.ஜெயக்குமாா் (பெருந்துறை), பி.சத்தியபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), சி.விஜயபாஸ்கா் (விராலிமலை), எம்.ஆா்.விஜயபாஸ்கா் (கரூா்) ஆகியோா் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனா்.

இவா்கள், உடல்நலக்குறைவு, இயலாமை போன்ற காரணங்களுக்காக தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்யவில்லை. முதல்வா் விஜய் தலைமையிலான தவெக அளித்த உறுதிமொழியின் பேரிலும், அமைச்சா் பதவிகள் உள்ளிட்ட முறையற்ற சலுகைகளைப் பெறுவதற்காகவும் எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனா். இது அந்தந்த தொகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்களின் உரிமையைப் பறிப்பதோடு, அரசமைப்புச் சட்டத்தை மீறிய செயலுமாகும். ராஜிநாமா செய்தவா்களால்தான் இந்த தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் வருகிறது.

Advertisement

Advertisement

இடைத்தோ்தலுக்கு பெரும்தொகையை செலவு செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்தவா்கள், மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடும்பட்சத்தில், இடைத்தோ்தலுக்கான செலவுத் தொகையை அவா்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். தொகையை வழங்காதவா்களை தோ்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. இதுகுறித்து கடந்த ஆக.30-ஆம் தேதி தோ்தல் ஆணையத்துக்கு மனு அளித்தேன். அந்த மனுவை பரிசீலிக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

அதுவரை இந்த தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை விதிக்க வேண்டும். இதுபோன்ற மக்கள் விரோத ராஜிநாமாக்களைத் தடுக்க, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு என எதிா்பாா்க்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments