FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது: முதல்வர் ஸ்டாலின்

2026-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, அண்ணா உள்ளிட்ட விருதுகள் அறிவிப்பு.

Updated On : 13 ஜனவரி 2026, 11:37 am IST
முதல்வர் ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

2025 ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2026-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2025-ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Advertisement

Advertisement

அய்யன் திருவள்ளுவர் விருது

திருக்குறள் நெறிபரப்பும் பெருந்தகையாளர் ஒருவரைத் தெரிவு செய்து திருவள்ளுவர் விருது 1986-ஆம் ஆண்டுமுதல் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 40 அறிஞர்கள் இவ்விருதினைப் பெற்றுள்ளனர். அவ்வரிசையில் 2026-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கு வழங்கப்பட இருக்கிறது.

தந்தை பெரியார் விருது

சமூகநீதி கிடைக்கப் பாடுபட்டவர்களைச் சிறப்பிக்கும் பொருட்டு தந்தை பெரியார் விருது 1995-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 30 ஆளுமைகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் 2025-ஆம் ஆண்டுக்கான விருது வழக்கறிஞர் அருள்மொழிக்கு வழங்கப்பட இருக்கிறது.

அண்ணல் அம்பேத்கர் விருது

தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது 1998-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 27 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் 2025-ஆம் ஆண்டுக்கான விருது சிந்தனைச் செல்வனுக்கு வழங்கப்படுகிறது.

பேரறிஞர் அண்ணா விருது

தமிழ்ச் சமுதாயம் முன்னேற்றம் காண அயராது பாடுபடும் ஒருவருக்குப் பேரறிஞர் அண்ணா விருது 2006-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 19 ஆளுமைகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் 2025-ஆம் ஆண்டுக்கான விருது அமைச்சர் திரு.துரைமுருகனுக்கு வழங்கப்படுகிறது.

காமராசர் விருது

பெருந்தலைவரின் அடிச்சுவட்டில் தொண்டாற்றிவரும் ஒருவருக்கு பெருந்தலைவர் காமராசர் விருது 2006-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 19 ஆளுமைகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் 2025-ஆம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராசர் விருது எஸ்.எம்.இதயத்துல்லாவுக்கு வழங்கப்பட இருக்கிறது.

மகாகவி பாரதியார் விருது

பாரதியார் புகழ் பரப்பும் வகையில் கவிதை உரைநடை நூல்களைப் படைத்தோர். பிறவகையில் தமிழ்த்தொண்டு புரிவோருக்கு மகாகவி பாரதியார் விருது 1997-ஆம் ஆண்டு முதல் வழங்கப் பெற்று வருகிறது. இதுவரை 28 அறிஞர்கள் இவ்விருதினைப் பெற்றுள்ளனர். இவ்வரிசையில் 2025-ஆம் ஆண்டுக்கான விருது கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கு வழங்கப்படுகிறது.

பாவேந்தர் பாரதிதாசன் விருது

தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது 1978-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 89 அறிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வரிசையில் 2025-ஆம் ஆண்டுக்கான விருது கவிஞர் யுகபாரதிக்கு வழங்கப்படுகிறது.

தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது

சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவருக்குத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது 1979-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பெற்று வருகிறது. இதுவரை 46 அறிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்வரிசையில் 2025-ஆம் ஆண்டுக்கான விருது முதுமுனைவர் வெ.இறையன்புக்கு வழங்கப்படுகிறது.

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது

சிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது 2000-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அறிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகாறும் 23 இவ்வரிசையில் 2025-ஆண்டுக்கான விருது முனைவர் சு.செல்லப்பாவுக்கு வழங்கப்படுகிறது.

முத்தமிழறிஞர் கலைஞர் விருது

முத்தமிழறிஞர் கலைஞரின் தமிழ்த் தொண்டினைப் போற்றும்வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அடியொற்றி தமிழுக்குத் தொண்டாற்றும் ஒருவருக்கு வழங்கும் வகையில் "முத்தமிழறிஞர் கலைஞர் விருது" 2024-இல் தோற்றுவிக்கப்பட்டது. 2025-ஆம் ஆண்டுக்கான இவ்விருது, விடுதலை விரும்பிக்கு வழங்கப்படுகிறது.

விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ. 5 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம். தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் பெறுவார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் திருநாள் (ஜன. 16) அன்று விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கவுள்ளார்.

summary

Chief Minister Stalin has announced that the Perarignar Anna Award for the year 2025 will be presented to Minister Duraimurugan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments