முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை!
முதல்வர் விஜய்யை இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தித்தது பற்றி...
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய்யை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநிலச் செயலர்களும் இன்று (ஜூலை 1) காலை நேரில் சந்தித்தனர்.
இதனிடையே, இன்று மாலை நடைபெறும் தவெக தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பங்கேற்க மாட்டார்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெக தனிப் பெரும்பான்மைப்புக்குத் தேவையான 118 தொகுதிகள் இல்லாததால் மற்ற கட்சிகளின் ஆதரவை நாடியது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் தவெக அரசு ஆட்சி அமைத்தது.
இந்த நிலையில், சென்னையில் முதல்வர் விஜய் தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு, தோழமைக் கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க ஆட்சி அமைக்க ஆதரவளித்த அனைத்துக் கட்சிகளுக்கு முதல்வர் விஜய் சார்பில் அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த கூட்டத்தில், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், சென்னை தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக முதல்வர் விஜய்யை, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் இன்று காலை நேரில் சந்தித்தனர்.
அப்போது, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.
கம்யூனிஸ்ட்டுகள் பங்கேற்காதது ஏன்?
இன்றைய தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் தவெக தலைமையிலான புதிய கூட்டணியின் பெயரை முதல்வர் விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ், ஐயூஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டனர். ஆனால், விசிக இதுவரை திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த கூட்டணியிலும் தற்போது இணையப் போவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், இன்றைய கூட்டத்தில் அவர்கள் பங்கேற்கவில்லை.
CPM, CPI leaders met Chief Minister Vijay - Will not participate in the evening meeting!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.