மேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ்
மேக்கேதாட்டு விவகாரத்தில் காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? என்று எடப்படி பழனிசாமி கேள்வி எழுப்பியது பற்றி...
மேக்கேதாட்டு விவகாரத்தில் காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? என்று அதிமுக பொதுச்செயலர் எடப்படி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:
நமது பரந்து விரிந்த தேசத்தில் பல்வேறு மாநில ஆட்சியாளர்கள் உள்ளனர்! அவர்களில் திமிர்த்தனமும், அதிகார மமதையும், சர்வாதிகார மனப்பான்மையும், சகோதரத்துவத்தை சீர்குலைக்கும் எண்ணம் கொண்ட ஒரே ஆட்சியாளர்களாகத் திகழ்வது கர்நாடகத்தை நிர்வகிக்கும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் என்பது நம் நாட்டின் சாபக்கேடு!
Advertisement
Advertisement
தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள் தங்களின் வேளாண் தொழிலுக்கு காவிரி நீரை நம்பித்தான் இருக்கிறார்கள். சுமார் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் குடிநீருக்கு காவிரி நீரை பயன்படுத்தி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தண்ணீருக்காக நாம் அவர்களிடம் கையேந்தி நிற்க வேண்டும் என்று கர்நாடக ஆட்சியாளர்கள் நினைக்கிறார்களே தவிர, காவிரியில் நமக்குள்ள உரிமையை உணர மறுக்கிறார்கள்! காவிரி நதிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நதிநீர் தகராறு தீர்ப்பாயமும், உச்ச நீதிமன்றமும் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி பல தீர்ப்புகளை வழங்கிய பின்பும், உதாசீனப்படுத்துவதையே கர்நாடக ஆட்சியாளர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் பெரும் வளர்ச்சிக்கு அங்கு வாழும் தமிழர்களின் உழைப்புதான் காரணம் என்பதை, தற்போது ஆட்சி செய்யும் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முதல்வர் டி.கே. சிவகுமார் மறந்துவிடக்கூடாது. காங்கிரஸ் அரசின் நீர்பாசனத் துறை அமைச்சர் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்றும், காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் தர உத்தரவிடவில்லை என்றும், தமிழகத்திடமிருந்து காவிரியில் உரிய பங்கு நீரை திறந்துவிட எந்தக் கோரிக்கையும் விடவில்லை என்றும் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்ற காவிரி ட்ரிபியூனல் தீர்ப்பையும், அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும், கர்நாடக அரசு முறையாக செயல்படுத்துகிறதா என்பதை கண்காணிப்பதுதான் காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி. இதை மறைத்துவிட்டு, மேலாண்மை ஆணையம் உத்தரவிடவில்லை, தண்ணீர் தரமுடியாது என்று கர்நாடக நீர்பாசனத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி அவர்கள் சொல்வது வடிகட்டிய பொய்.
தமிழக மக்களின் வாழ்வோடு கர்நாடக காங்கிரஸ் ஆட்சியாளர்கள் விளையாடுவதை, த.வெ.க. அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கக்கூடாது! கர்நாடக அரசு காவிரி நதிநீர் தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கர்நாடகம் தமிழகத்துக்கு தரவேண்டிய பங்கு நீரைப் பெறுவதற்கு த.வெ.க. அரசின் முதல்வர் கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும்.
காவிரியில் தமிழகத்துக்குரிய பங்கு நீரை கர்நாடக அரசு உடனடியாக விடுவிக்கவில்லையெனில், 'தமிழக அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் விடுவிக்கப்படுவார்' என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியை எச்சரிக்க த.வெ.க. அரசின் முதலமைச்சர் தயாரா?
'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்'
'ஆட்சிப் பொறுப்பில் இருந்து தவறி, மக்களுக்கு அநீதி இழைப்பவர்களை அந்த அறநெறியே, எமனாக (கூற்றாக) மாறி தண்டிக்கும்'
என்று தமிழக, கர்நாடக இரு ஆட்சியாளர்களையும் எச்சரிக்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
AIADMK General Secretary Edappadi Palaniswami has questioned whether Chief Minister Vijay is prepared to remove the Congress minister from the cabinet over the Mekedatu issue.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.