அரசுப் பள்ளியில் தவெக நிகழ்ச்சி நேரலை! தலைமையாசிரியர் சஸ்பெண்ட்!
கரூரில் அரசுப் பள்ளியில் தவெக நிகழ்ச்சியை ஒளிபரப்பிய பள்ளியின் தலைமையாசிரியரை பணியிடை நீக்கம் செய்தது குறித்து...
கரூரில் அரசுப் பள்ளியில் தவெக நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டதாக பள்ளியின் தலைமையாசிரியரை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கரூரில் முதல்வர் விஜய் பங்கேற்ற நிகழ்ச்சி, அரசுப் பள்ளி வகுப்பறையில் மாணவர்களுக்கு நேரலையில் காட்டப்பட்டதாக தவெக அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி.
அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்குக் காட்டக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது.
இந்த உத்தரவை மீறி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியை நேரலை செய்து மாணவர்களுக்கு திரையிட்ட சம்பவம் தவறு.
இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன். விசாரணையில், பள்ளித் தலைமையாசிரியர் தன்னிச்சையாக முடிவு செய்து, துறை உத்தரவுகளையும் ஒழுங்குமுறைகளையும் மீறி இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஒரு காணொலி குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. “கல்வி நிலையங்களில் அரசியலுக்கு இடமில்லை” என்ற முதல்வரின் ஆணையை நாங்கள் தொடர்ந்து உறுதியாக கடைப்பிடிப்போம். பள்ளிக்கூடம் கல்விக்காக, அரசியலுக்காக அல்ல என்பதே பள்ளிக்கல்வித் துறையின் தெளிவான கொள்கையாகும்.
இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழ்நாட்டின் எந்தப் பள்ளியிலும் நடைபெறாத வகையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மீண்டும் கடுமையாக அறிவுறுத்துக்கிறேன்.
கல்விச் சூழலைக் காப்பதும், கல்வி நிலையங்களின் நடுநிலைத்தன்மையை பாதுகாப்பதும் நம் ஆசிரியர்கள் அனைவரின் கூட்டு பொறுப்பாகும். அரசின் உத்தரவுகளை மீறுவது யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தயக்கமின்றி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
Headmaster of a government school in Karur suspended for screening a TVK party event at the govt school
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.