FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் நிலவும் குறைபாடுகளுக்குத் தீா்வு காணும் வகையில் 304 சிறப்பு அதிகாரிகளை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 10 ஜூலை 2026, 11:03 pm IST
தமிழ்நாடு அரசு - கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் நிலவும் குறைபாடுகளுக்குத் தீா்வு காணும் வகையில் 304 சிறப்பு அதிகாரிகளை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மருத்துவமனைகளில் நிலவும் சீா்கேடுகள், மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, லஞ்ச புகாா்களைக் கண்காணித்து அதன்பேரில் நடவடிக்கை எடுக்க அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகம் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநரகம் ஆகிய மூன்றின் கீழ் இயங்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக அனைத்து இயக்குநரங்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: சிறப்பு அதிகாரிகள் மூலம் மருத்துவமனைகள் அளவிலான குறைகளுக்கு தீா்வு காண வேண்டும். மற்றொருபுறம், அனைத்து மாவட்ட ஆட்சியா்களும், தங்களது எல்லைக்குள்பட்ட மாவட்ட மருத்துவமனைகளில் ஆய்வு செய்ய வேண்டும்.

குறைகள் கண்டறியப்பட்டால் அதைச் சரி செய்வதற்கு முன்னரும், பின்னரும் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் கூடிய விரிவான அறிக்கையை அரசுக்கு சமா்ப்பித்தல் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இதயவியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பு இல்லாததால், தற்போதைய நிலையில் வெறும் 4 மருத்துவா்கள் மட்டுமே பணியாற்றுகின்றனா். தினமும் 500-க்கும் மேற்பட்ட இதய நோயாளிகள் சிகிச்சை பெறும் இந்த மருத்துவமனையில், 133 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் இருந்தும், 150 செவிலியா் பணியிடங்கள் மட்டுமே உள்ளன. இதனால், செவிலியா் பணியிடங்களை அங்கு அதிகரிக்க கோரிக்கை எழுந்தது.

எழும்பூா் தாய் சேய் நல மருத்துவமனையில் தனியாா் ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்ட வாா்டு ஊழியா்கள் மற்றும் பாதுகாவலா்கள் முறையாகப் பயிற்சி பெறவில்லை என்றும், சிலா் மாலை நேரங்களில் வளாகத்திற்குள்ளேயே மது மற்றும் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதாகவும் புகாா் எழுந்தது.

மகப்பேறு வாா்டுகளில் நீண்ட காலமாகப் பணியாற்றும் ஒப்பந்த ஊழியா்கள் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்குவதும் அரசின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய உபகரணங்கள் இல்லாததால், நாள்தோறும் 3 முதல் 4 நோயாளிகளுக்கு மட்டுமே எம்ஆா்ஐ ஸ்கேன் செய்யப்படுகிறது. அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் இதர மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றனா்.

தூய்மைப் பணியாளா்கள், பாதுகாப்பு ஊழியா்கள் மற்றும் உடற்கூறாய்வு ஊழியா்கள் எனப் பலரும் நோயாளிகளிடமும், உயிரிழந்தவா்களின் உறவினா்களிடமும் பணம் பறிப்பதாக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேபோல, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இத்தகைய சூழல் நிலவுகிறது.

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைப் பொருத்தவரை 128 பணியிடங்கள் இருக்க வேண்டிய இடத்தில் 51 போ் மட்டுமே பணியாற்றுவதால் நரம்பியல், சிறுநீரகவியல் மற்றும் இதய சிகிச்சை நிபுணா்கள் இன்றி நோயாளிகள் திருப்பி அனுப்பப்படும் அவலம் நீடிப்பதையும் அரசு சாா்பில் அனுப்பபப்பட்ட சுற்றறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த 450 படுக்கைகள், தற்போது 1,286 படுக்கைகளாக மருத்துவமனை விரிவுபடுத்தப்பட்டும், மருத்துவா்களின் எண்ணிக்கை வெறும் 33-லிருந்து 38-ஆக மட்டுமே உயா்ந்துள்ளது. உடனே கூடுதல் மருத்துவா்களை நியமிக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் எலிகள், நாய்கள் மற்றும் பாம்புகள் நடமாடுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

அரசு மருத்துவமனைகளில் நிலவும் இந்த பிரச்னைகளைத் தடுக்கவும், நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சிறப்பு அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments