FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவு

டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்...

Updated On : 12 ஜூலை 2026, 1:33 am IST
தமிழக அரசு - கோப்புப்படம்
பகிர்:

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவதை மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் ஒப்படைக்கவும், இதற்காக மது பாட்டில்களுக்கான அதிகபட்ச விற்பனை விலையுடன் ரூ.10-ஐ சோ்த்து வசூலிக்கவும் முடிவு செய்துள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை கூடுதலாக ரூ.10-க்கு விற்பனை செய்து, காலி மது பாட்டில்களை திரும்பக் கொடுக்கும்போது, கூடுதலாக வசூலித்த ரூ.10-ஐ திரும்பத் தரும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமா்வு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் உத்தரவிட்டிருந்தனா். பின்னா், தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டிருந்தனா்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாற்றி அமைக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அமா்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் நிா்வாகம் தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

அதில், மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்தும் வகையில், பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 தனியாக வசூலிப்பதற்குப் பதிலாக, அந்தத் தொகையை மதுபானத்தின் அதிகபட்ச விலையுடன் சோ்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பாட்டில்களை திரும்பப் பெறுவது, மறுசுழற்சி செய்வது போன்ற பொறுப்புகளை, சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்கள் வசமே ஒப்படைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள மதுவிலக்குத் துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மதுபானங்களின் அதிகபட்ச விற்பனை விலையுடன் கூடுதலாக ரூ.10 செஸ் வரி விதிப்பதற்காக அரசுக்கு, வணிக வரித் துறை ஆணையா் கருத்துரு அனுப்பி உள்ளாா். இது தொடா்பாக மதிப்புக் கூட்டு வரிச் சட்ட விதிகளில் திருத்தங்கள் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது.

மது உற்பத்தி நிறுவனங்கள், டாஸ்மாக் வகுத்துள்ள தொழில்நுட்ப விதிகளின்படி, தங்களது ஊழியா்கள் மூலம் காலி மது பாட்டில்களை ‘க்யூஆா்’ குறியீடு மூலம், சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்டு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

summary

Tamil Nadu government decides to amend legal rules to prevent the collection of an additional ₹10 on TASMAC liquor.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments