FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

காவிரி டெல்டா விவசாயிகளை காக்க சிறப்புத் திட்டத்தை வகுக்க வேண்டும்: அன்புமணி

காவிரி டெல்டா விவசாயிகளை காக்க சிறப்புத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்பது தொடர்பாக...

Updated On : 13 ஜூலை 2026, 12:09 pm IST
பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்
பகிர்:

காவிரி டெல்டா விவசாயிகளை காக்க சிறப்புத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

காவிரியில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகம் திறந்து விடுவதற்கான எந்த அறிகுறியும் இல்லாததாலும், வடகிழக்கு பருவமழையும் பொய்த்துப் போகும் என்று கணிக்கப்பட்டிருப்பதாலும் நடப்பு ஆண்டில் சம்பா சாகுபடியும் நடைபெற வாய்ப்பில்லை என்று உழவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மிக மோசமான இந்த சூழலை சமாளிக்க அரசுத் தரப்பில் எதுவும் செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய 3 பருவங்களில் நெல் சாகுபடி செய்யப் படுவது வழக்கம். குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் அந்தப் பருவம் முடிந்த பிறகு தாளடி சாகுபடி செய்வார்கள். பாசன வசதி பெரிதாக இல்லாத பகுதிகளில் ஒருபோகமாக சம்பா சாகுபடி செய்யப்படுவது வழக்கம். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் கடந்த ஜூன் 12&ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மேட்டூர் அணையில் போதுமான அளவுக்கு தண்ணீர் இல்லாததாலும், கர்நாடகம் தண்ணீர் திறக்க மறுப்பதாலும் இதுவரை மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.

Advertisement

Advertisement

அதனால், காவிரி டெல்டாவில் வழக்கமாக 6 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் நடைபெறும் குறுவை சாகுபடி இப்போது பாதிக்கும் கீழாக குறைந்து விட்டது. பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதாலும், போதிய அளவு மும்முனை மின்சாரம் வழங்கப்படாததாலும் நீர் பாய்ச்ச முடியாததால் நெல் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. பல பகுதிகளில் டேங்கர் சரக்குந்துகள் மூலம் நீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. இதனால் குறுவை பருவத்தில் 7 லட்சம் டன் நெல் உற்பத்தி இழப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடி செய்ய முடியாத விவசாயிகள், சம்பா சாகுபடிக்கு ஆயத்தமாகி வந்தனர். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாத நிலை உருவாகி விடும் என்று இப்போது அச்சம் தெரிவித்து உள்ளனர். சம்பா சாகுபடியை வெற்றிகரமாக முடிப்பதற்கு செப்டம்பர் முதல் வாரத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை குறைந்தது 140 டி.எம்.சி தண்ணீர் தேவை. ஆனால், இன்றைய சூழலில் அதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 75.65 அடியாக குறைந்து விட்டது. அணைக்கு வினாடிக்கு 80 கன அடி மட்டுமே தண்ணீர் வரும் நிலையில், குடிநீர் தேவைகளுக்காக 1000 கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது. இதனால் நீர் மட்டம் குறைந்து வருகிறது.

இன்னொருபுறம் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளின் நீர் இருப்பு இன்று காலை 60 டி.எம்.சியாக அதிகருத்துள்ளது. அதே நேரத்தில் இரு நாள்களுக்கு முன்பு வரை 50 ஆயிரம் கனஅடிக்கும் கூடுதலாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 16,830 கன அடியாக குறைந்து விட்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தால் தவிர கர்நாடக அணைகளுக்கு தண்ணீர் வருவதற்கோ அங்கிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவதற்கோ வாய்ப்புகள் இல்லை. ஏற்கனவே, குறுவை பயிர்களை நீரின்றி காப்பாற்ற முடியாத நிலையில், செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக மேட்டூர் அணை திறக்கப்படுவதுடன், அணையின் நீர்மட்டமும், நீர்வரத்தும் திருப்தியாக இல்லாத சூழலில் சம்பா சாகுபடி செய்ய காவிரி பாசன மாவட்ட உழவர்கள் தயாராக இல்லை என்று உழவர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

காவிரி பாசன மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், அதை நம்பியும் சாகுபடி செய்ய உழவர்கள் தயாராக இல்லை. இதனால், சம்பா சாகுபடி வழக்கமான அளவான 14 லட்சம் ஏக்கரில் இருந்து 5 முதல் 6 லட்சம் ஏக்கராக குறைந்து விடக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. சம்பா சாகுபடி இந்த அளவுக்கு குறைந்தால் 16 முதல் 17 லட்சம் டன் நெல் உற்பத்தி குறையும். இதனால் தமிழ்நாட்டிற்கு இரு வகையான பாதிப்புகள் ஏற்படக்கூடும். முதலில் 60 முதல் 70% அளவுக்கு விவசாயம் பாதிக்கப்படுவதால் காவிரி பாசன மாவட்ட உழவர்கள் கடுமையான பொருளாதார இழப்புக்கு ஆளாவார்கள்.

இரண்டாவதாக குறுவை, சம்பா பருவங்களில் காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 25 லட்சம் டன் அளவுக்கு நெல் உற்பத்தி குறைந்தால் அது தமிழ்நாட்டில் கடுமையான அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தும்; அரிசி விலைகள் ஏற்கனவே கிலோவுக்கு ரூ.10 வரை உயர்ந்துள்ள நிலையில், மேலும் உயரக்கூடும். இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவார்கள்.

நிலைமை இந்த அளவுக்கு மோசமாக இருக்கும் நிலையில், அதை எதிர்கொள்வதற்கான எந்தத் திட்டமும் தமிழ்நாடு அரசிடம் இல்லை. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கச் செய்தல், சம்பா தொகுப்பாக ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கி அதன் மூலம் பாசனத் தேவைகளை சமாளித்து சம்பா சாகுபடியை உறுதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடும், தமிழக மக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் மலிவு விலையில் வெளிச்சந்தை அரிசியையும் வழங்க வேண்டும்.

குறுவையைப் போலவே சம்பா சாகுபடியும் பொய்த்துப் போவதைத் தடுக்கவும், அது சாத்தியமாகாத நிலையில் பாதிக்கப்படும் விவசாயிகள், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவும் சிறப்புத் திட்டம் ஒன்றை வகுத்து அரசு செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் உழவர்கள் நலன்களை காக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

summary

A special scheme must be formulated to protect Cauvery Delta farmers...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments