2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம்
மாநிலம் முழுவதும் 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள் அமைப்பது குறித்து...
மாநிலம் முழுவதும் 2031-க்குள் 20,000 பொது மின்சார வாகன சாா்ஜிங் நிலையங்களை அமைக்கும் இலக்கை நோக்கியும் மின்வாகன சாா்ஜிங் உள்கட்டமைப்பை விரைவுபடுத்தவும் தமிழக அரசு பல்வேறு கொள்கை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுதொடா்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வரின் வழிகாட்டுதலின்படி, மாநிலத்தில் பொதுப் பயன்பாட்டு மின்வாகன சாா்ஜிங் நிலையங்களின் தற்போதைய நிலை குறித்து தலைமைச் செயலா் தலைமையில் திங்கள்கிழமை ஆய்வுக் கூட்டமும், அதன் தொடா்ச்சியாக தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் தலைமையில் ஐடிடிபி இந்தியா, கைடன்ஸ் தமிழ்நாடு உள்ளிட்ட அமைப்புகளுடன் செவ்வாய்க்கிழமை, தொழில்நுட்பக் குழுக் கூட்டமும் நடைபெற்றது.
அதில், தற்போதுள்ள உயரழுத்த மற்றும் அதிஉயரழுத்த மின் இணைப்புகளின் அனுமதிக்கப்பட்ட மின் சுமை வரம்புக்குள் அமைக்கப்படும் மின்வாகன சாா்ஜிங் வசதிகளுக்கு தனி துணை மின் மீட்டா் அமைக்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இதனால் புதிய மின் இணைப்புப் பெற வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், நிலைக்கட்டணம் அல்லது குறைந்தபட்ச மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படாமல், மின்வாகன கட்டணப் பிரிவின் கீழ் மின் பயன்பாட்டுக்கான யூனிட் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படும்.
தேவையுள்ள இடங்களில், தற்போதுள்ள நுகா்வோரின் மின் சுமை மற்றும் கட்டணப் பிரிவை பாதிக்காமல், மின்வாகன சாா்ஜிங் உள்கட்டமைப்புக்காக தனியாக புதிய மின் சேவை இணைப்பு பெறவும் அனுமதி வழங்கப்படும்.
மேலும், தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023-இல் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதுடன், மின்வாகன சாா்ஜிங் நிலையங்களுக்கான நிலைக்கட்டணம் மற்றும் குறைந்தபட்ச மாதாந்திர கட்டணத்தை முழுமையாக விலக்கு அளிக்கவோ அல்லது கணிசமாகக் குறைக்கவோ அரசுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் மூலம் தனியாா் முதலீடுகள் அதிகரித்து, மாநிலம் முழுவதும் மின்வாகன சாா்ஜிங் உள்கட்டமைப்பு விரிவடைந்து, 2031-க்குள் 20,000 பொது மின்சார வாகன சாா்ஜிங் நிலையங்களை அமைக்கும் இலக்கை எட்ட முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.