அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து!
வீ தி லீடர்ஸ் அமைப்பின் திருச்செந்தூர் மாநாடு ரத்து செய்யப்பட்டது பற்றி...
வீ தி லீடர்ஸ் (We The Leaders) - இது நம்ம இயக்கம் அமைப்பின் திருச்செந்தூர் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவிலிருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, கடந்த ஜூன் 5 அன்று வீ தி லீடர்ஸ் அமைப்பை தொடங்குவதாக அறிவித்தார்.
50 லட்சம் உறுப்பினர்களை அடைந்த பிறகு, முறையாக அரசியல் கட்சியாக மாற்றப்பட்டு, மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவோம் என்று அண்ணாமலை ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
இதனிடையே, கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேவுள்ள ஆச்சிப்பட்டியில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாடு ’போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு மாநாடு’ என்ற பெயரில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
அந்த மாநாட்டில் அடுத்த 6 மாதங்கள் சுற்றுச்சூழல், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் போன்றவற்றை மையமாகக் கொண்டு மாநாடு நடத்தப்படும் என்றார். ஜூலை 26 அன்று தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஜூலை 26 அன்று நடைபெறவிருந்த திருச்செந்தூர் மாநாடு ரத்து செய்யப்படுவதாக வீ தி லீடர்ஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
"வீ தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் திருச்செந்தூரில் நடைபெறவிருந்த மாபெரும் பொதுக்கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதற்குப் பதிலாக, வரும் ஆகஸ்ட் மாதம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி, இயற்கை மற்றும் சுற்றுப்புற விழிப்புணர்வு சார்ந்த மாபெரும் சமூக நல நிகழ்வுகள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தப்படவுள்ளன.
இந்தச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறும் தேதி, இடம் குறித்த முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
மாற்றத்தை நோக்கி நம்மோடு பயணிக்கும் அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் நன்றி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Annamalai’s We the Leaders Tiruchendur conference cancelled
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.