பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை!
பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவச் சிலைக்கு முதல்வர் ஜோசப் விஜய் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியது தொடர்பாக...
பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் ஜோசப் விஜய் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நாடு முழுவதும் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் காமராஜரின் திருவுருவச் சிலை மற்றும் உருவப் படத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், வணிகர்கள், மக்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் ச.ஜோசப் விஜய், பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஜூலை 15) சென்னை, அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Advertisement
Advertisement
அவரைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜகான், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ.மரிய வில்சன், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் ரா.குமார், மாநிலங்களவை உறுப்பினர் திரு. பிரவீன் சக்கரவர்த்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரில் குமாரசாமி - சிவகாமி தம்பதியினருக்கு 15.7.1903 அன்று மகனாகப் பிறந்தார். பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் 1919-ஆம் ஆண்டு முதல் பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டார்.
1930-ஆம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார். அதைத்தொடர்ந்து, பல்வேறு அரசியல் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வந்தார். 1936-ஆம் ஆண்டு சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும், 1940-ஆம் ஆண்டு முதல் 1954-ஆம் ஆண்டு வரை சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவராக திறம்பட பணியாற்றினார். மேலும், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், விருதுநகர் நகரமன்றத் தலைவராகவும், பலமுறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றினார்.
வலுவான அடித்தளம்
1954-ஆம் ஆண்டு குடியாத்தம் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றிபெற்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், தமிழ்நாடு முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். தனது 9 ஆண்டுகால ஆட்சியில் மாநிலத்தின் கல்வி, தொழில், நீர்ப்பாசனம் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்திட பெரும்பங்காற்றினார்.
இலவச மதிய உணவுத் திட்டம்
தமிழ்நாட்டில் பள்ளிகள் இல்லாத ஊரே இருக்கக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் கிராமங்கள்தோறும் பள்ளிகளைத் தொடங்கி வைத்து கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். ஏழை மாணவர்கள் பள்ளிகளில் கல்வி கற்பதற்கு ஏதுவாக, இலவச மதிய உணவுத் திட்டத்தினை 1956-ஆம் ஆண்டில் கொண்டுவந்தார்.
நீர்ப்பாசனம், வேளாண் வளர்ச்சிக்கு உறுதுணை
காமராஜர் தனது ஆட்சிக்காலத்தில் மணிமுத்தாறு அணை, வைகை அணை, அமராவதி அணை, கீழ்பவானி அணை, சாத்தனூர் அணை, கிருஷ்ணகிரி அணை, பரம்பிக்குளம் அணை, ஆரணியாறு அணை, புள்ளம்பாடி அணை மற்றும் வீடூர் அணை போன்ற பல்வேறு அணைகளை உருவாக்கி நீர்ப்பாசனத்திற்கும், வேளாண் வளர்ச்சிக்கும் உறுதுணையாகத் திகழ்ந்தார்.
பொதுத்துறை நிறுவனங்களை கொண்டு வந்தவர்
திருச்சி பாரத மிகுமின் நிறுவனம் (பிஎச்இஎல்), நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்(என்எல்சி), சென்னை, பெரம்பூரில் ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலை (ஐசிஎப்), ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலை (எச்விஎப்) போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்தவர் காமராஜர் .
‘கிங் மேக்கர்’
1964-ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற பெருந்தலைவர் காமராஜர், நேருவின் மறைவிற்குப் பின்னர் இந்தியாவின் பிரதமரை இரண்டு முறை தேர்ந்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். அதனால் அவர் ‘கிங் மேக்கர்’ என்று அழைக்கப்பட்டார்.
பாரத ரத்னா விருது
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற பெருந்தலைவர் காமராஜர், தன் வாழ்நாளில் 9 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளார். அவரது மறைவுக்குப்பின் 1976-ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, நினைவு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Chief Minister Vijay pays tribute to the statue of the great leader Kamarajar...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.