FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஆந்திர - தமிழக கடற்பகுதிகளில், சுமூகமாக மீன்பிடிப்பில் ஈடுபட நடவடிக்கை: தமிழக அரசு

ஆந்திரத்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ள சென்னை மீன்பிடிபடகுகளை உடனடியாக விடுவித்திட கோரிக்கை.

Updated On : 16 ஜூலை 2026, 4:52 pm IST
தமிழக அரசு - கோப்புப்படம்
பகிர்:

சென்னை மற்றும் ஆந்திர பிரதேச மீனவர்களிடையே கடலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை தீர்த்து, மீனவர்கள் சுமூகமான மீன்பிடிப்பில் ஈடுபடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஏறத்தாழ 50 ஆண்டுகளாக சென்னை மீன்பிடித்துறைமுகத்தினை தங்குதளமாகக் கொண்டு செயல்படும் மீன்பிடி படகுகள், சென்னைக்கு கிழக்கே வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் மீன்பிடிப் பகுதிகள் வரை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

குறிப்பாக, தங்குகடல் (Multi-day) மீன்பிடிப்பிற்கு செல்லும் சுமார் 200 மீன்பிடி விசைப்படகுகள், ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளில் மீன்பிடிப்பினை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாடு மற்றும் குறிப்பாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆந்திரப் பிரதேச கடல் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபடுவதனால், அப்பகுதியில் மீன்வளங்கள் குறையும் என்ற அச்சம் சமீப காலங்களில் ஆந்திர மாநில மீனவர்களிடையே உருவாகியுள்ளது. 

இதன் காரணமாக, ஆந்திர கடற்பகுதியில் அண்டை மாநில மீன்பிடிப் படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடுவதை தடை செய்யக் கோரி ஆந்திர பிரதேச மீனவர்கள் மேற்கொண்ட போராட்டங்களின் விளைவாக, அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட்டது. எனவே, ஆந்திர பிரதேச அரசு அதிகாரிகள், இந்திய கடல்சார் மண்டலச் சட்டம், 1976 ன் படி, மாநில அரசின் அதிகார எல்லையாக வரையறுக்கப்பட்டுள்ள, 12 கடல் மைல் தொலைவிற்குள் மீன்பிடிப்பில் ஈடுபடும் சென்னை மீன்பிடி படகுகளை சிறைபிடித்து வருகின்றனர். தற்பொழுது, சென்னையைச் சார்ந்த 7 விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்டு, ஆந்திர மாநிலம் ஜீவலடின் மீன்பிடிதுறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.      

இது தொடர்பாக, சென்னை மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கைகளின் அடிப்படையில், இப்பிரச்னைகளுக்கு சுமூகமான தீர்வு காணும் நோக்கில், தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட அரசாணைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இரு மாநில அதிகாரிகள் கொண்ட மாவட்ட அளவிலான குழுக் கூட்டத்தை (District Level Committee) விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, இப்பிரச்னை தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அளவிலும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் தலைமையிலும் மற்றும் நிதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள், திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் தலைமையிலும், சென்னை மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பல்வேறு கட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

மேலும், மீன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளை நேரடியாக ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு அனுப்பியும்,  தமிழ்நாடு மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்கவும், ஆந்திர கடற்பகுதியில் தமிழ்நாடு மீனவர்கள் வழக்கம்போல், சுமூகமாக மீன்பிடிப்பில் ஈடுபட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச மீனவர்களுக்கிடையிலான பிரச்னைகள் குறித்து விவாதித்து, சுமூகமான தீர்வை ஏற்படுத்தும் நோக்கில், 11.07.2026 அன்று ஆந்திரப் பிரதேச மாநிலம், நெல்லூரில் நடைபெற்ற இரு மாநிலங்களுக்கிடையேயான கூட்டத்தில், தமிழ்நாட்டின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், ஆந்திர மாநிலத்தின் மீன்வளத்துறை ஆணையர், நெல்லூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், ஆந்திரத்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ள சென்னை மீன்பிடிபடகுகளை உடனடியாக விடுவித்திடவும், சென்னை மீனவர்களின் வாழ்வாதாரத்தினை கருத்திற்கொண்டு, அவர்களை வழக்கம்போல், ஆந்திர மாநில கடற்பகுதிகளில் மீன்பிடித்திட அனுமதிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

இவ்வாறாக, சென்னையைச் சார்ந்த மீன்பிடி விசைப்படகுகள் வழக்கமாக மீன்பிடிப்பில் ஈடுபடும் ஆந்திர-தமிழக கடற்பகுதிகளில், தொடர்ந்து சுமூகமாக மீன்பிடிப்பில் ஈடுபட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்  ஆந்திர அரசுடன் ஒருங்கிணைந்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

It has been stated that the Tamil Nadu government is taking all necessary measures to resolve the issues arising between fishermen from Chennai and Andhra Pradesh regarding fishing at sea and to enable them to carry out their fishing activities smoothly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments